சென்னை: மாநில அரசு பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை நிரப்ப தகுதியுள்ள நபரை தேர்ந்தெடுக்க தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பது மாநில அரசு பல்கலைக்கழக சட்ட பிரிவுகளுக்கு உட்பட்டு எடுக்கப்பட்ட முடிவு என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாநில அரசு பல்கலைக்கழகங்களின் சட்டப் பிரிவுகளின்படி அமைக்கப்பட்ட தேடுதல் குழுவினால் பரிந்துரைக்கப்படும் 3 நபர்களில் ஒருவர் சார்ந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், தமிழக ஆளுநரால் நியமனம் செய்யப்படுவார். இதுவரை இந்த நடைமுறையையே பின்பற்றப்பட்டு வருகிறது.
பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்படும் தேடுதல் குழுவை அறிவிக்கையாக வெளியிடுமாறு ஆளுநர், அரசிற்கு பரிந்துரை மட்டுமே செய்ய முடியுமே தவிர, தன்னிச்சையாக தேடுதல் குழுவினை அமைத்து அறிவிக்கை வெளியிடுவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. ஆளுநரின் மேற்கண்ட அறிவிக்கைகளை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன.
அவற்றில் பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை, சென்னை பல்கலைக்கழகம், சென்னை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை, அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்; மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மதுரை; மேலும், திருச்சி, பாரதிதாசன் மற்றும் சேலம் பெரியார் பல்கலைக்கழகங்களின் தற்போதைய துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவுற்ற நிலையில் அவர்களது பணிக்காலம் ஆளுநரால் மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டு அவை முறையே பிப்ரவரி 2025 மற்றும் மே 2025ல் முடிவுறவுள்ளது.
மேலும், திருச்சி, பாரதிதாசன் மற்றும் சேலம், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவிக்காலம் முறையே வரும் பிப்ரவரி 2025 மற்றும் மே 2025ல் முடிவடைய உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் பல்வேறு இடையூறுகளை பலவகையிலும் ஆளுநர் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதிதான் துணைவேந்தர் தேடுதல் குழு அமைப்பு விவகாரத்தில் ஆளுநர் அனுப்பி உள்ள கடிதம்.
பல்வேறு மாநிலங்களைக் கொண்ட இந்தியாவில் அந்தந்த மாநில மக்களின் பண்பாட்டு கூறான கல்வி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை மாநில மக்களின் தேவைகளை உணர்ந்து அந்தந்த மாநில தேவைகளுக்கு தகுந்தார்போல் உயர்கல்வி அமைப்பினை அமைத்துக் கொள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு அதிகாரமும் உரிமையும் உள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அதற்கென்று உருவாக்கப்பட்ட சட்டத்தின் படியே செயல்படுகிறது.
வேந்தர் என்ற பதவி வழி பொறுப்பை பயன்படுத்தி அரசு பல்கலைக்கழக சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளை முடக்குவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. ஆளுநர் அவர்கள் சட்டத்தை தவறாக தன் கையில் எடுத்துச் செயல்முறைகள் வெளியிடும் போக்கை அரசு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. மாணவர்கள் நலன் கருதி மாநில ஆளுநர் பல்கலைக்கழகச் சட்டத்திற்கு உட்பட்டு அமைக்கப்பட்ட தேடுதல் குழுவிற்கு ஒப்புதல் அளித்திடுவதே அவர் வகிக்கும் பதவிக்கு அழகாகும். இனியாவது ஆளுநர் தனது செயல்பாட்டினை மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
The post பல்கலை துணைவேந்தர் நியமன விவகாரம் சட்டப்படிதான் முடிவு எடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் கோவி செழியன் விளக்கம் appeared first on Dinakaran.