பலரிடம் கடன் வாங்கி முதலீடு ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.1 கோடி இழந்ததால் வாலிபர் தற்கொலை: குறுகிய காலத்தில் பணக்காரனாக மாற வேண்டும் என்ற ஆசையால் ஏற்பட்ட விபரீதம்

1 month ago 6

சென்னை: குறுகிய காலத்தில் பணக்காரனாக மாற வேண்டும் என்ற ஆசையால், பலரிடம் கடன் வாங்கி, சொத்துகளை விற்று ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்ட வாலிபர், ரூ.1 கோடியை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பூந்தமல்லி அடுத்த சென்னீர்க்குப்பம் தேவி நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (33). இவரது மனைவி ரமி (28). இவர்களுக்கு, ஒன்றரை வயதில் குழந்தை ஒன்று உள்ளது. வினோத்குமார் எல்ஐசி ஏஜென்டாக பணிபுரிந்து வந்தார். மேலும் இவர், ஷேர் மார்க்கெட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத்தில் ஆரம்பத்தில் சிறிய அளவு முதலீடுகள் செய்து லாபம் ஈட்டியுள்ளார்.‌ இதனால் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஷேர் மார்க்கெட்டில் பல்வேறு நிறுவனங்களில் அவர் முதலீடு செய்துள்ளார். சீக்கிரம் பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில் பல பேரிடம் கடன் வாங்கி ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.1 கோடி வரை முதலீடு செய்துள்ளார். ஆனால் ஆன்லைன் வர்த்தகத்தில் அவருக்கு தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை அவர் ஆன்லைன் வர்த்தகத்தில் இழந்துள்ளார். இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு இவரது சொத்துகளை விற்று கடனை அடைத்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் எப்படியாவது பணக்காரனாகி சொத்துக்களை வாங்க வேண்டும் என்ற ஆசையில் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாமல் பலரிடம் கடன் வாங்கி மீண்டும் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனாலும் தொடர்ந்து அவருக்கு ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கடன் கொடுத்தவர்கள் அவரிடம் கடனை திருப்பி கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலில் வினோத்குமார் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இவரது பெற்றோர் நேற்றுமுன்தினம் இரவு ராமேஸ்வரம் செல்வதற்காக சென்னை ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றுள்ளனர். அவரது மனைவியும் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். வீட்டில் வினோத்குமார் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது இவருக்கு ரூ.15 லட்சம் கடன் கொடுத்த பூந்தமல்லியை சேர்ந்த ஒருவர் தொடர்ந்து போன் செய்துள்ளார். இதனால் மன வேதனையுடன் இருந்த வினோத்குமார், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்தில் அவரது மனைவி வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வினோத்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவரது பெற்றோருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ராமேஸ்வரம் செல்ல இருந்த அவர்கள் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து திரும்பி வந்து மகனின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இது குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போலீசார் வினோத்குமார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

The post பலரிடம் கடன் வாங்கி முதலீடு ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.1 கோடி இழந்ததால் வாலிபர் தற்கொலை: குறுகிய காலத்தில் பணக்காரனாக மாற வேண்டும் என்ற ஆசையால் ஏற்பட்ட விபரீதம் appeared first on Dinakaran.

Read Entire Article