சென்னை: பெங்களூருவில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத 4 விமானங்கள் சென்னையில் வந்து தரையிறங்கின. அதேபோல், மேலும் 2 விமானங்கள் திருப்பதிக்கு சென்று தரை இறங்கின. பெங்களூருவில் நேற்று மாலை திடீரென பலத்த சூறைக்காற்றுடன் மழை கொட்டியது. இதனால் மோசமான வானிலை நிலவியதால், பெங்களூருவில் தரையிறங்க முடியாமல் 6 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
அந்த விமானங்களில் 4 விமானங்கள், சென்னை விமான நிலையத்திலும், 2 விமானங்கள் திருப்பதியிலும் தரை இறங்கின. சிலிகுரியில் இருந்து 160 பயணிகளுடன் பெங்களூரு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், ராஜ்கோட்டில் இருந்து 154 பயணிகளுடன பெங்களூரு சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஐதராபாத்தில் இருந்து 137 பயணிகளுடன் பெங்களூரு சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஹாங்காங்கிலிருந்து பெங்களூரு சென்ற சரக்கு விமானம் ஆகிய 4 விமானங்கள் பெங்களூருவில் தரையிறங்க முடியாமல் நேற்று மாலை 6.20 மணியிலிருந்து 7.10 மணிக்குள் ஒன்றன்பின் ஒன்றாக, சென்னையில் வந்து தரையிறங்கின.
அதேபோல், 2 டெல்லி விமானங்கள், பெங்களூருவில் தரையிறங்க முடியாமல், திருப்பதிக்கு சென்று தரை இறங்கின. பெங்களூருவில் வானிலை சீரடைந்த பின்பு இந்த விமானங்கள் மீண்டும், சென்னை மற்றும் திருப்பதியில் இருந்து பெங்களூரு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே, பயணிகள் அனைவரும் அந்தந்த விமானங்களிலேயே அமர வைக்கப்பட்டனர்.
The post பலத்த சூறைக்காற்றுடன் மழை பெங்களூரு விமானங்கள் சென்னையில் தரையிறங்கின appeared first on Dinakaran.