பல பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து வீடியோ எடுத்து மிரட்டி பணம், நகை பறித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த பாஜ பிரமுகர் கைது: தாம்பரம் அருகே பரபரப்பு

1 month ago 4

தாம்பரம்: பல பெண்களிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து பணம், நகை பெற்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த பாஜ பிரமுகர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இது, தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலையூர் அடுத்த செம்பாக்கம், திரு.வி.க தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் லியாஸ் தமிழரசன் (24). இவர் சேலையூர்-அகரம்தென் பிரதான சாலையில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு சட்டப்படிப்பு படித்து வருவதுடன், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜ இளைஞரணி செயலாளராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில், இவர் கடந்த 2018ம் ஆண்டு பள்ளியில் படிக்கும் போது தன்னுடன் படித்த பெண் ஒருவரிடம் பழகி வந்துள்ளார். பின்னர் 11ம் வகுப்பு படிக்கும் போது அந்த பெண்ணிடம்தான் அவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்த பெண்ணிடம், தான் அவரை காதலிப்பதாக தெரிவித்து வந்த நிலையில் 12ம் வகுப்பு படிக்கும் போது அந்த பெண்ணும் லியாஸ் தமிழரசனின் காதலை ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதை தொடர்ந்து லியாஸ் தமிழரசன் அந்த பெண்ணை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரது பெற்றோரிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். தொடர்ந்து அந்த பெண்ணிடம் ஆசைவார்த்தைகளை கூறி கார், ஐபோன், ஐவாட்ச், நகை, பணம் என சிறுக சிறுக சுமார் 20 லட்சம் பணம் மற்றும் 20 சவரன் நகை பெற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். மேலும் தமிழரசன் அந்த பெண்ணை கடந்த 2022ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் அவரது வீட்டிற்கு அழைத்து சென்று தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.

தொடர்ந்து அந்த பெண்ணை தமிழரசன் பல இடங்களுக்கு அழைத்து சென்று பலமுறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஒரு கட்டத்தில் அந்த பெண் லியாஸ் தமிழரசனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டபோது, அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியாது என கூறியதோடு அவருக்கு தெரியாமல் லியாஸ் தமிழரசன் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோது எடுத்த வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என கூறி மிரட்டலும் விடுத்துள்ளார்.

இந்நிலையில் அந்த பெண் லியாஸ் தமிழரசனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சோதனை செய்து பார்த்தபோது அதில் அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் அந்த பெண்களிடமும் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பணம் மற்றும் நகைகளை பெற்று ஏமாற்றியதும் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி பல பெண்களுடன் லியாஸ் தமிழரசன் உல்லாசமாக இருப்பதை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து தனது செல்போனில் வைத்திருந்ததும் தெரிந்தது.

இதை தொடர்ந்து அந்த பெண் சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் லியாஸ் தமிழரசனை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், லியாஸ் தமிழரசன் பல பெண்களை ஏமாற்றி பணம் மற்றும் நகை பெற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. எனவே, போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்ற கோணத்தில் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல லியாஸ் தமிழரசினால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணும் சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்ந்து அவர் மீது புகார் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

* தகவல் தர மறுத்த பெண் இன்ஸ்பெக்டர்
பல பெண்களை ஆசைவார்த்தை கூறி அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து, அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்து பின்னர் அவர்களை மிரட்டி பணம் மற்றும் நகை பெற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்த லியாஸ் தமிழரசன் கைது செய்யப்பட்டது குறித்து, சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராக்குமதியிடம் பத்திரிகையாளர்கள் விசாரித்தபோது அவர் அப்படி ஒருவரை கைது செய்யவே இல்லை என்பது போல் பேசியதோடு எந்த ஒரு தகவலையும் தர மறுத்ததோடு தொடர்ந்து லியாஸ் தமிழரசன் தரப்பினருக்கே அவர் சாதகமாக செயல்பட்டு வந்தார். ஆய்வாளரின் இந்த செயல் சட்டத்தின் மீதும், போலீசாரின் நடவடிக்கை மீதும் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்படுத்தும்படி இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post பல பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து வீடியோ எடுத்து மிரட்டி பணம், நகை பறித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த பாஜ பிரமுகர் கைது: தாம்பரம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article