பல ஆண்டுகளாக ஒரே மாவட்டத்தில் பணி முறைகேடான ஆவணங்களை பதிவு செய்ய டிஎஸ்பி கலைச்செல்வன் மிரட்டுகிறார்: தமிழ்நாடு பதிவுத்துறை அனைத்து ஊழியர்கள் ஒருங்கிணைப்புக்குழு பரபரப்பு குற்றச்சாட்டு

3 months ago 6

சென்னை: பல ஆண்டுகளாக ஒரே மாவட்டத்தில் பணியாற்றும் டிஎஸ்பி கலைச்செல்வன், முறைகேடான ஆவணங்களை பதிவு செய்யச் சொல்லி மிரட்டுவதாக பதிவுத்துறையைச் சேர்ந்த அனைத்து ஊழியர்கள் ஒருங்கிணைப்புக்குழு குற்றம்சாட்டியுள்ளது.திருப்பத்தூர் மாவட்ட பதிவாளராக உள்ள செந்தூர்பாண்டியனின், சென்னை நொளம்பூரில் உள்ள வீடு, திருப்பத்தூரில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த சோதனை குறித்து தமிழ்நாடு பதிவுத்துறை அனைத்து ஊழியர்கள் ஒருங்கிணைப்புக்குழு வெளியிட்ட அறிக்கை: செங்கல்பட்டு 2 எண் இணை சார்பதிவக எல்லைக்குட்பட்ட நின்னகரை கிராம சொத்தும் படப்பை சார்பதிவக எல்லைக்குட்பட்ட இரண்டு சொத்துகளையும் சேர்த்து கிரைய உடன்படிக்கை ஆவணம் எழுதப்பட்டு சம்மந்த முதலியார் மகன் தனசேகரால் செங்கல்பட்டு 2 எண் இணை சார்பதிவகத்தில் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டு, அப்போது சார்பதிவாளர் பொறுப்பில் இருந்த ராமமூர்த்தி, உதவியாளரால் இந்த ஆவணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நடைமுறை தவறு ஏதும் நடந்ததாக தெரியவில்லை.

இந்த ஆவணம் 2020ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு கோவிட் காலம் என்பதால் கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்த சமயம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பணியாளர்களை பதிவு பணியில் ஈடுபடுத்த அரசு உத்தரவு பிறப்பித்து, அதனடிப்படையில் அன்றைய காலத்தில் உதவியாளர்களும் சார்பதிவாளர் பொறுப்பில் பணியாற்றுவது வழக்கமாக இருந்தது. மேலும் செங்கல்பட்டு 2 எண் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் வருடத்திற்கு நிறைய ஆவணங்கள் பதிவு செய்யப்படும் நிலையில், அந்த ஆவணங்கள் தொடர்பாக களப்பணி மற்றும் இடப்பார்வை மேற்கொள்ள அலுவலகத்திலிருந்து வெளியில் சென்று பார்வையிடும் நிலையில், சார்பதிவாளருக்கு அடுத்த கீழ்நிலையில் உள்ள உதவியாளர்களுக்கு மாவட்ட பதிவாளரின் ஒப்புதலுடன் சார்பதிவாளர் பொறுப்பு வழங்குவது நடைமுறை ஆகும்.

அதன்படி மேற்கண்ட உதவியாளருக்கு சார்பதிவாளர் பொறுப்பு வழங்கப்பட்டு, அவரால் மேற்கண்ட ஆவணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு சட்டம் பிரிவு 28ன்கீழ் இந்த ஆவணம் பதிவுச்செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட கிரைய உடன்படிக்கை ஆவணத்தை பொறுத்தவரை அரசுக்கு எந்த ஒரு இழப்பும் இல்லாத நிலையில் எதன் அடிப்படையில் அரசுக்கு இழப்பு என லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கிட்டுள்ளது என்று தெரியவில்லை.

பதிவுத்துறையில் இதுபோன்ற அரசுக்கு எந்த ஒரு இழப்பும் இல்லாத நிலையில், தமிழ்நாடு பதிவுத்துறை அனைத்து ஊழியர்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவர் என்ற நிலையில் செந்தூர்பாண்டியன் மீது பொய்யான புகாரை சித்தரித்துள்ளது. ஒரு சார்பதிவாளர் களப்பணி மற்றும் இடப்பார்வைக்காக வெளியில் செல்ல மாவட்ட பதிவாளரிடம் அனுமதி பெற்றும், சார்பதிவாளருக்கு அடுத்த நிலையில் உள்ள உதவியாளரிடம் பொறுப்பு ஒப்படைத்து செல்லும் போது, பொறுப்பு சார்பதிவாளரால் பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு அவரவர்களே பொறுப்பு என்ற நிலையில், மேற்கண்ட கிரைய உடன்படிக்கை ஆவணம் பொறுப்பு சார்பதிவாளரால் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அன்றைய சார்பதிவாளராக உள்ள தற்போதைய மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவர் செந்தூர்பாண்டியன் மீது எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில் பொய்யான புகாரை சுமத்தி ஜோடித்துள்ளது. இதற்கு எதன் அடிப்படையில் பதிவுத்துறை அனுமதி அளித்தது என்பது வியப்பாக உள்ளது.

மேலும் இதேபோன்று 2015ம் ஆண்டு மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவர் செந்தூர்பாண்டியன் அன்றைய குன்றத்தூர் சார்பதிவாளராக பணியாற்றியபோது பதிவு செய்த ஆவணங்களில், மதனந்தபுரம் கிராமத்திற்குட்பட்ட 2 ஆவணங்கள் அவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களில் எழுதி கொடுத்த நபர் மற்றும் எழுதி வாங்கிய நபர் ஆகியோரின் அடையாளத்தை அரசினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையின் மூலம் சரிபாக்கப்பட்டு, எழுதி கொடுத்தவருக்கு அச்சொத்து சொந்தமானது என்பதற்கு அவரால் சமர்ப்பிக்கப்பட்ட முன் ஆவணம் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் நகலுடன் சரிபார்க்கப்பட்டு இரண்டு சரியாகவும் ஒத்துபோன நிலையிலும் அந்த ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டது.
இதில் நடைமுறை தவறு ஏதும் இல்லை. இதை பதிவுத்துறை தலைவர் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆனால், பதிவுத்துறை தலைமை பொய் புகாருக்கு அனுமதி அளித்தது ஆச்சரியம் அளிக்கிறது. மேலும் லஞ்சஒழிப்புத்துறையின் இந்த பொய்புகாரை எதிர்த்து மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவரால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆகையால் மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவர் செந்தூர்பாண்டியன் மீது புனையப்பட்ட 2 முதல் தகவல் அறிக்கைகளையும் ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை அவரை பழிவாங்க மேற்கொள்ளப்பட்டதாக தெரிய வருகிறது.

மேலும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையில் பணியாற்றிவரும் கலைச்செல்வன், காவல் ஆய்வாளர் நிலையில் சுமார் 15 வருடங்களும், டிஎஸ்பியாக சுமார் 6 வருடங்களும் ஒரே மாவட்டத்தில் அதாவது காஞ்சிபுரத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் சார்பதிவாளர்களை தொடர்புகொண்டு முறைகேடான ஆவணங்களை பதிவு செய்ய தொடர்ந்து மிரட்டி வருவது தெரிய வந்துள்ளது.

இவர் தொடர்ந்து அரசு பணியாளர்களை மிரட்டுவதை தொழிலாக செய்து வருகிறார். மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் மாமனார் வீட்டில் நேற்று முன்தினம் (பிப்.14ம் தேதி) நடத்தப்பட்ட சோதனையில் எந்த ஒரு ஆவணமோ, நகையோ, பணமோ கைப்பற்றப்படாத நிலையில், டிஎஸ்பி கலைச்செல்வன் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணிபுரியாத வெளிநபர்களை சோதனைக்கு அழைத்து சென்று அவர்கள் மூலமாக தவறான தகவலை ஊடகங்களுக்கு கசியவிட்டு மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவரை பொதுவெளியில் அசிங்கப்படுத்த முயற்சி செய்துள்ளார்.

மேலும் மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவரை கைது செய்துவிட்டதாகவும் பொய்யான தகவலை பரப்பியுள்ளார். இது சம்பந்தமாக அவர் மீது நீதிமன்றத்தில் மானநஷ்டடு வழக்கு தொடரப்படும். எங்கள் மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவர் செந்தூர்பாண்டியனின் நன்மதிப்பினை கெடுப்பதாக லஞ்சஒழிப்புத்துறையின் செயல்பாடு உள்ளது. இது தொடர்பாக அரசு விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவர் என்ற நிலையில் அவருக்கு பணி பாதுகாப்பும் உயிர் பாதுகாப்பும் வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post பல ஆண்டுகளாக ஒரே மாவட்டத்தில் பணி முறைகேடான ஆவணங்களை பதிவு செய்ய டிஎஸ்பி கலைச்செல்வன் மிரட்டுகிறார்: தமிழ்நாடு பதிவுத்துறை அனைத்து ஊழியர்கள் ஒருங்கிணைப்புக்குழு பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article