சென்னை, பிப்.21: பறக்கும் ரயில்- புறநகர்- மெட்ரோ ரயிலை இணைக்கும் பரங்கிமலை ரயில் முனையம், ₹15 கோடியில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் மார்ச் மாதம் முடிவடைந்து, ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், ரயில் போக்குவரத்து சேவையை அதிகரிக்கவும், பறக்கும் ரயில் திட்டம் அமைக்கும் திட்டம் 1985ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை 3 கட்டங்களாக இத்திட்டத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டது.
முதல் கட்டமாக 1997ம் ஆண்டு கடற்கரை முதல் மயிலாப்பூர் இடையே 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு ₹266 கோடியில் அமைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக ₹877.59 கோடியில் மயிலாப்பூர் முதல் வேளச்சேரி வரை தொடங்கப்பட்டு கடந்த 2007ம் ஆண்டு முடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 3ம் கட்டமாக 2008ம் ஆண்டு ₹495 கோடியில் வேளச்சேரி முதல் பரங்கிமலை இடையே பணிகள் தொடங்கியது. மொத்தம் 5 கிலோ மீட்டர் தூரத்தில் 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் நிலம் கையகப்படுத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே எஞ்சியுள்ள அரை கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் மட்டும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. திட்டமிட்டப்படி பணிகள் 2010ல் முடியாததால் இதற்கான திட்ட மதிப்பீடு உயர்ந்தது. அதனை தொடர்ந்து நிலம் கையகப்படுத்த நீதிமன்றம் மூலம் தீர்வுகாணப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதற்கு முன்னதாகவே புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. இங்கு ரயில் பாதை சிக்னல் கட்டமைப்புகளும் முடிவடைந்தன. பணிகள் எஞ்சியுள்ள பகுதியில் தூண்கள் அமைத்து, அதற்குமேல் பாதைகள் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றன. அப்போது அங்கு அமைக்கப்பட்ட தூண்கள் மீது அமைக்கப்பட்ட ரயில் பாலம் திடீரென சரிந்து பாரம் தாங்காமல் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
அதன்படி பல்வேறு பிரச்னைகள் மற்றும் போராட்டங்களுக்கு பிறகு 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்கும் ரயில் வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் 16 ஆண்டுகளுக்கு பின் முடிவு நிலையை எட்டியுள்ளது.
இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டால், பரங்கிமலை – கோயம்பேடு மெட்ரோ ரயில் சேவை, சென்னை கடற்கரை – தாம்பரம் புறநகர் மின்சார ரயில் சேவை மற்றும் சென்னை கடற்கரை – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை ஆகியவை ஒருங்கிணைந்து ஒரு ரயில் முனையமாக பரங்கிமலை செயல்பட உள்ளது. இதையொட்டி, ₹14.15 கோடி மதிப்பீட்டில் பரங்கிமலை ரயில் நிலையம் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது. இதில், ரயில் நிலையத்தின் கிழக்கு மற்றும் மேற்கு புறங்களில் முகப்பின் அழகியல் மேம்படுத்தப்படுகிறது.
பேருந்து நிறுத்த பக்கத்தில் நுழைவு வளைவுகள், அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய புதிய முன்பதிவு இடங்கள், பாதசாரிகளுக்கான நடைபாதை, அனைத்து தளங்களுக்கும் புதிய தளங்கள் மற்றும் கூடுதல் நடைமேடை, காத்திருப்பு அறை, பார்க்கிங் ஏரியா புதுப்பிப்பு, பிரதான நுழைவாயிலிலும், சென்னை மெட்ரோ ரயில் ரயில் நிலையத்திலும் உள்ள தளங்களை பலப்படுத்துவது போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல், பயணிகள் தங்களின் ரயில் நேரம் குறித்தான தகவல் காட்சி பலகைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பொது அறிவிப்பு அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட தளங்கள், புதிய முன்பதிவு அலுவலகங்கள், கூடுதல் தங்குமிடங்கள், பார்க்கிங் மற்றும் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. இந்த பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜூன் மாதம் முதல் வேளச்சேரி – பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்க உள்ளது.
The post பறக்கும் ரயில்-புறநகர்-மெட்ரோ ரயில் சேவையை இணைக்கும் பரங்கிமலை ரயில் முனையம் ₹15 கோடியில் மறுசீரமைப்பு: ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது appeared first on Dinakaran.