பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக டீசல் இன்ஜினாக மாற்றி குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே ஊட்டி மலை ரயில் சோதனை ஓட்டம்

3 weeks ago 4

குன்னூர்: குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதை இடையே பர்னஸ் ஆயில் மூலம் இயங்கும் எக்ஸ் கிளாஸ் இன்ஜின் டீசல் இன்ஜினாக மாற்றப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக நீலகிரி மலை ரயில் சேவை இயங்கி வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினம்தோறும் மலைரயில் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை பர்னஸ் ஆயில் மூலம் மலை ரயில் இயக்கப்பட்டு வருவதோடு, குன்னூர்-ஊட்டி இடையே டீசல் இன்ஜின் மூலம் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பர்னஸ் ஆயிலால் மலை ரயிலை இயக்குவதால் அதிகளவில் மாசு ஏற்படுவதாக கூறி, அதனை மாற்றுவதற்கு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு இருந்தது.

இதையடுத்து பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக டீசல் இன்ஜினை மாற்றிமைக்கும் முயற்சியில் தென்னக ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டனர். இதன்படி பர்னஸ் ஆயில் இன்ஜின், டீசல் இன்ஜினாக மாற்றப்பட்டு மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே இயக்கப்பட்ட 37399 என்ற எண் கொண்ட எக்ஸ் கிளாஸ் இன்ஜின் பர்னஸ் ஆயில் பணிமனையில் பழுது நீக்கப்பட்டு, குன்னூர் ரயில்வே பணிமனையில் டீசல் நீராவி இன்ஜினாக மாற்றி வடிவமைக்கப்பட்டது.

இதையடுத்து மாற்றி வடிவமைக்கப்பட்ட டீசல் இன்ஜின் 3 ரயில் பெட்டிகளுடன் இணைக்கப்பட்டு குன்னூர் – ரன்னிமேடு இடையே நேற்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்ற நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட பின்பு தீபாவளிக்கு முன்பு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

குன்னூர் பணிமனை மூத்த தொழில்நுட்ப வல்லுநர் மாணிக்கம் முயற்சியில் பர்னஸ் ஆயில் இன்ஜினை தற்போது டீசல் என்ஜினாக மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த திட்டம்‌ வெற்றி அடைந்துள்ளது. ஏற்கனவே இவர் பர்னஸ் ஆயில் இன்ஜினை டீசல் இன்ஜினாக மாற்றி அமைத்துள்ளார். மேலும் இந்த இன்ஜின் மூலம் இயக்கப்படும் மலை ரயில், இனி வரும் காலங்களில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாதவாறு இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக டீசல் இன்ஜினாக மாற்றி குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே ஊட்டி மலை ரயில் சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article