பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மக்களுக்கான தேவைகளை செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்: தாம்பரத்தில் ஆய்வுக்குப் பின் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

1 month ago 4

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, பல்லாவரம் சட்டமன்ற தொகுதி, தாம்பரம் மாநகராட்சி, 2வது மண்டலத்துக்கு உட்பட்ட ஈசா பல்லாவரம், மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமை ஆய்வு செய்தார். தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சியில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க தாம்பரத்தின் குரல் என்ற புதிய செயலியினை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர். 5வது மண்டலத்துக்கு உட்பட்ட இரும்புலியூர் முதல் ஜிஎஸ்டி சாலை, முடிச்சூர் சாலை சந்திப்பு வரை 96.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீர்வளத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டனர்.

தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலத்துகுட்பட்ட தாம்பரம் – கிஷ்கிந்தா பிரதான சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1 கிலோமீட்டர் நீளத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் ஆய்வு செய்து மக்களுக்கு என்னென்ன தேவைகள் உள்ளதோ அதை செய்து தர முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, செங்கல்பட்டு கலெக்டர் அருண் ராஜ், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், நகராட்சி நிர்வாக துறை இயக்குனர் சிவராசு, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், இ.ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

The post பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மக்களுக்கான தேவைகளை செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்: தாம்பரத்தில் ஆய்வுக்குப் பின் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article