டெல்லி :சாட்ஜிபிடி, டீப் சீக் உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று ஒன்றிய நிதியமைச்சகம் தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு என்பது பொதுவாக மனித நுண்ணறிவு தேவைப்படும் பணிகளைச் செய்யக்கூடிய கணினி அமைப்புகளை குறிப்பதாகும். இந்த பணிகளில் கற்றல், பகுத்தறிதல், சிக்கலைத் தீர்ப்பது, இயற்கை மொழியைப் புரிந்துகொள்வது மற்றும் புதிய தகவலை மாற்றியமைத்தல் ஆகியவை இதில் அடங்கும். தற்போது அமெரிக்காவை சேர்ந்த ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி, கூகுளின் ஜெமினி போன்றவை முன்னணி ஏஐ தொழில்நுட்பங்களாக உள்ளன.
இந்த வரிசையில் டீப்சீக் எனும் ஏஐ செயலியை சீனா அறிமுகப்படுத்தி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், சாட் ஜிபிடி, டீப் சீக் உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று ஒன்றிய நிதி அமைச்சகம் தனது ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து ஒன்றிய நிதி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் பிரதீப் குமார் சிங் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த அறிக்கையில், அலுவலக கணினிகளில் உள்ள ஏஐ செயலிகளால் அரசின் முக்கியமான தகவல்கள் கசிய வாய்ப்புள்ளது. இந்த அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்ய, அனைத்து ஊழியர்களும் தங்களின் அலுவல் தொடர்பான கணினிகளில் ஏஐ செயலிகளை பயன்படுத்த வேண்டாம்,”என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post சாட்ஜிபிடி, டீப் சீக் உள்ளிட்ட AI செயலிகளை பயன்படுத்த வேண்டாம்: ஒன்றிய நிதியமைச்சகம் தனது ஊழியர்களுக்கு உத்தரவு!! appeared first on Dinakaran.