சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் 45க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் வடிகால்களை இணைக்கும் பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முடிப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. மேலும் நடப்பாண்டில் அந்த இடங்களில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க எந்த வகையான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டாலும் அவை இன்னும் முடிக்கப்படவில்லை.
தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் சென்னையில் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ளவில்லை. இதே நிலை தொடர்ந்தால் சென்னை மாநகர மக்கள் நடப்பாண்டும் பேரிடரையும் பெருந்துயரையும் எதிர்கொள்வதை எவராலும் தடுக்க முடியாது. மழை என்பது மகிழ்ச்சியானது. ஆனால் வடகிழக்குப் பருவமழை என்றாலே அஞ்சி நடுங்கும் நிலைக்கு சென்னை மாநகர மக்கள் தள்ளப்பட்டு இருப்பது பெருந்துயரமாகும். இந்த அவல நிலைக்கு நடப்பாண்டிலாவது அரசு முடிவு கட்ட வேண்டும். வடகிழக்குப் பருவமழை வரும் 15ம் தேதி தொடங்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள்ளாக போர்க்கால அடிப்படையில் வெள்ளத்தடுப்புப் பணிகளை நிறைவு செய்ய வேண்டும்.
The post பருவமழை தொடங்கும் முன்னரே மழைநீர் வடிகால்களை சரி செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.