ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே, பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி வரும் 11ம் தேதி திறந்து வைக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் அமைக்கப்பட்டுள்ள பழைய தூக்குப்பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து 2022ம் ஆண்டு பாலத்தில் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் தடை விதித்தது. மேலும் தூக்குப்பாலம் விரிசல் மற்றும் அதிக அதிர்வு காரணமாக வலுவிழந்தது. இதையடுத்து ரயில்வே நிர்வாகம் 2023, பிப்ரவரி மாதம் பாம்பன் பழைய பாலத்தில் ரயில் சேவை நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால், ராமேஸ்வரம் வரை செல்லும் அனைத்து ரயில்களும் தற்போது வரை மண்டபம் ரயில் நிலையம் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பில் புதிய இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலம் அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு கடந்தாண்டு இறுதியில் நிறைவு பெற்றது. பல்வேறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட புதிய ரயில் பாலம் தற்போது திறப்பு விழாவிற்கு தயாராகியுள்ளது. இம்மாதத்திற்குள் புதிய பாலத்தை திறந்து வைத்து, பயணிகளுடன் ராமேஸ்வரம் வரை மீண்டும் ரயில் சேவையை தொடர ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக கடந்த 31ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கன்னியாகுமரி விரைவு ரயிலில் வந்த பயணிகள் அனைவரும் வழக்கம் போல் மண்டபம் ரயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். பின்னர் பராமரிப்பு பணிக்காக மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு பயணிகளின்றி, 18 காலி பெட்டிகளுடன் புறப்பட்ட விரைவு ரயில் சுமார் 60 கிமீ வேகத்தில் புதிய ரயில் பாலம் வழியாக ராமேஸ்வரம் ரயில் நிலையம் சென்றடைந்தது. 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு நேற்று ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் மீண்டும் ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகள் துவங்கியது.
தொடர்ந்து பகல் 12 மணிக்கு இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப்பாலம் திறக்கப்பட்டது. இதில் இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பல் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் இருந்து மன்னார் வளைகுடா கடல் நோக்கி கடந்து சென்றது. பின் தூக்குப்பாலம் இறக்கப்பட்டு மண்டபத்தில் இருந்து 22 காலி ரயில் பெட்டிகளுடன் வந்த போட் மெயில் ரயில் புதிய பாலத்தை கடந்து ராமேஸ்வரம் சென்றது. இந்த ரயிலை பொறியாளர்கள் தூக்குப்பாலத்தின் நுழைவில் நிறுத்தி வைத்து ஆய்வு நடத்தினர். பின் மீண்டும் தூக்குப்பாலம் உயர்த்தி திறக்கப்பட்டு இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல் கடந்து பாக் ஜலசந்தி கடலுக்கு சென்றது. காலையில் பராமரிப்பு பணிக்கு ராமேஸ்வரம் சென்ற கன்னியாகுமரி விரைவு ரயிலை திருப்பதிக்கு மாற்றி நண்பகல் 2 மணியளவில் ரயில் பாலத்தை கடந்து சென்றது. அதன்பின் தூக்குப்பாலத்தை முழுமையாக மூடி ரயில்வே அதிகாரிகள் ஒத்திகையை நிறைவு செய்தனர்.
புதிய பாலத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்
பாம்பன் புதிய ரயில் பாலம் அனைத்து சோதனை ஓட்டங்களையும் கடந்து திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. புதிய பாலத்தை தைப்பூச தினமான வரும் 11ம் தேதி பிரதமர் மோடி நேரடியாக வந்து பாம்பன் பாலத்தை திறக்க உள்ளார். இதற்காக அவர் தமிழகம் வருகிறார். மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்தில் இருந்து கப்பல் மூலம் பிரதமர் மோடி பாம்பன் வருகிறார். அங்கிருந்து கப்பலில் சென்று பழைய பாலம் மற்றும் புதிய பாலத்தை பார்வையிடுகிறார். பின்னர், புதிய ரயில் பாலத்தை கொடியசைத்து போக்குவரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, அந்த ரயிலில் பயணம் செய்யும் வகையில் திறப்பு விழா நிகழ்ச்சி திட்டமிடப்பட்டு உள்ளது. இதையொட்டி பிரதமரின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஓரிரு நாட்களில் மண்டபம், ராமேஸ்வரம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.
The post ரூ.550 கோடியில் கடலில் அமைக்கப்பட்டுள்ள பாம்பன் பாலம் 11ம் தேதி திறப்பு: பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.