பருவ மகளிர் பராமரிப்பு

1 week ago 6

நன்றி குங்குமம் டாக்டர்

ஹெல்த் + வெல்னெஸ்!

டீன் ஏஜ் எனும் தேவதைப் பருவம் அற்புதமானது. உடலெல்லாம் சிறகு முளைத்த பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரியும் ஆனந்த காலம். ஆனால் ஒரு சிறுமியை இந்த சமூகம் பெண் என்று அடைத்துவைக்கும் பருவமும் இதுதான். பெண் உடலில் ஈஸ்ட்ரோஜன் முதல் பாலியல் ஹார்மோன்கள் வரை அனைத்தும் உச்சத்தில் இருக்கும் காலம். இந்தக் காலகட்டத்தில் பெண்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்களாக இருப்பார்கள். தனக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலை வந்திருக்கும்.

சில சமயங்களில் தான் புறக்கணிக்கப்படுகிறோம். தன் கருத்துகள் மதிக்கப்படுவதில்லை என்பதைப் போன்ற உணர்வுகள் அலைகழிக்கும். இந்த காலகட்டத்தில் பெண் குழந்தைகளிடம் தோழமையுடன் நடந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். போதுமான அன்பு, போதுமான அக்கறை, பாதுகாப்பு அனைத்தும் மிகவும் அவசியம். அறிவை மீறி உணர்வுகள் இயங்கும் காலகட்டம் என்பதால் பக்குவமாக அவர்களை வழிநடத்த வேண்டும். ஒவ்வொரு விஷயத்திலும் அவர்களின் விருப்பங்களைப் புரிந்துகொண்டு அவர்களை மதிக்க வேண்டும்.

ஆடை, ஆபரணத் தேர்வு போன்ற சிறிய விஷயங்களில் அவர்களின் விருப்பத்தை மதிக்கலாம். மேற்படிப்பு, உறவுச் சிக்கல்கள், காதல் போன்ற பெரிய விஷயங்களில் அவர்கள் முடிவு தவறு என்று தோன்றினால் அவர்களுக்குப் புரியும்படி அன்பாக எடுத்துரைக்க வேண்டும்.பெண்கள் இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவுகளை வேளை தவறாமல் சாப்பிட வேண்டும். இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு பெண் குழந்தைகளுக்கே அதிகமாக உள்ளது என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

ரத்தசோகை போன்ற நோய்கள் ஏழைப் பெண்களுக்கு மட்டும் இல்லாமல் பணக்காரப் பெண்களுக்கும் இருக்கின்றன என்கிறது அந்தத் தகவல். டயட் என்று சின்னஞ்சிறிய டிபன் பாக்ஸில் வெறும் அரிசி சோற்றை மட்டும் உண்பது. ஃபேஷன் என்று பீஸா, பர்கர், ஜங்க் ஃபுட்ஸ், கோலா ஆகியவற்றை மட்டும் அதிகம் உண்பது போன்ற ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்தான் இந்த ரத்தசோகைக்கு காரணம். எனவே, சமச்சீரான ஆரோக்கியமான டயட்டை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

அலெர்ட் பூப்பெய்தும் காலம்!

பூப்பெய்தும் பருவம் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியமான காலக்கட்டம். இது குறித்து பெண் குழந்தைக்கு இருக்கும் சந்தேகங்கள், அச்சங்கள் இயல்பானவை. அவற்றை நீக்கி அது குறித்த முழுமையான தகவல்களைச் சொல்லி, மனதளவில் அந்தக் குழந்தையைப் பெண்மைக்குத் தயாராக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோருக்கும் முக்கியமான கடமை. பெண்ணின் உடலில் உள்ள சினைப்பையில் ஈஸ்ட்ரோஜென் உள்ளிட்ட பெண்மைக்கான ஹார்மோன்கள் சுரக்கத் தொடங்கும் பருவத்தையே பூப்பெய்துதல் என்கிறோம்.

இதனால், சினைப்பையில் கருமுட்டைகள் வளர்ச்சி அடைந்து, இனப்பெருக்கத்துக்குத் தயாராகும். சுமார் 28 நாட்கள் முதல் 40 நாட்களுக்குப் பிறகு அந்தக் கருமுட்டைகள் முதிர்ச்சியடைந்து வெளியேறுவதால் உதிரப்போக்கு ஏற்பட்டு மாதவிலக்கு எனும் உடலியல் நிகழ்வு ஏற்படுகிறது.

பூப்பெய்துதல் என்பது சுமார் இரண்டு வருடங்கள் எடுத்துக்கொள்ளும் தொடர் நிகழ்வாகும். இப்போது பெண்கள் சுமார் 12 வயதிலேயே பூப்பெய்திவிடுகிறார்கள். சிலருக்கு 14-16 வயதிலும் இது நிகழ்கிறது. இதற்கு மரபியல் உட்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. பூப்பெய்துவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பேயே மார்பு பெருக்கத் தொடங்கும். சிலருக்கு பிறப்பு உறுப்பு, அக்குளில் ரோமங்கள் வளரத் தொடங்கும். எனவே, பூப்பெய்தும் வயதுக்குக் கொஞ்சம் முன்பேயே பெண் குழந்தைகளுக்கு இதைப் பற்றி அறிவுறுத்த வேண்டும். இதனால், தேவை இல்லாத பயம், சந்தேகங்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

சிலருக்கு, மார்புத் தசை மென்மையாக இருக்கும். சிலருக்கு கடினமாக இருக்கும். சிலருக்கு மெலிதான வலிகூட இருக்கும். மேலும் சிலருக்கு ஒரு மார்பு அதிக வளர்ச்சியும் ஒரு மார்பு சற்று வளர்ச்சிக் குறைவாகவும் காணப்படும். இவையாவும் இயல்பான விஷயங்களே எனப் புரிய வைக்க வேண்டும். மாதவிலக்கு சுழற்சி சுமார் 28 நாட்கள் முதல் 40 நாட்களுக்கு ஒருமுறை நிகழும். பொதுவாக, ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை இருக்கும்.

ஒருவரின் உடல்வாகு, உணவுப் பழக்கம், வாழ்க்கைமுறை, மரபியல் போன்ற காரணங்களால் இந்த சுழற்சியில் வேறுபாடுகள் இருக்கும். எனவே, தனது தோழிக்கு இது போன்ற பிரச்னை இல்லையே எனக் குழம்ப வேண்டாம் என்று அறிவுறுத்த வேண்டும்.சானிட்டரி நாப்கின்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை பெண் குழந்தைகளுக்கு முன்பே கற்றுக்கொடுப்பது நல்லது. இது, முதல் முறை மாதவிடாய் ஏற்படும்போது அதை எதிர்கொள்வதற்கு உதவியாய் இருக்கும்.

பள்ளியிலோ வெளியிலோ இருக்கும்போது பூப்பெய்துதல் நிகழ்ந்துவிட்டால், தயங்காமல் ஆசிரியையிடமோ அருகில் உள்ள பெண்களிடமோ சொல்லி உதவி கேட்கலாம் தவறே இல்லை என்பதைக் கட்டாயம் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். முகத்தில் பரு ஏற்படுவது, அதிகமாக வியர்ப்பது, வியர்வை கடினமான வாடையுடன் இருப்பது, குரல் லேசாக மாறுவது, இடுப்பு அகலமாவது ஆகியவை அனைத்துமே பூப்பெய்துதலின் இயல்பான உடல் மாற்றங்கள் என்பதைப் புரியவைக்க வேண்டும்.

சில பெண் குழந்தைகள் தன் உடலில் ஏற்படும் மாற்றங்களால் தடுமாறி, தனிமையைத் தேடுவார்கள். இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் பெற்றோர் தோழமையுடன் குழந்தையிடம் நடந்துகொள்ள வேண்டும். அவர் உடல், மனம் சார்ந்த தடுமாற்றங்கள், சந்தேகங்களைப் போக்கி, ஆதரவாக இருக்க வேண்டும். சில பெண் குழந்தைகளின் பிடிவாதம் அதிகரிக்கும். சிலர் அதீத முதிர்ச்சியுடன் நடந்துகொள்வார்கள். சிலர் சட்டென அமைதியாகிவிடுவார்கள். சிலர் விளையாட்டுத்தனமாகவே இருப்பார்கள். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அவர்கள் உடலில் நடக்கும் மாற்றங்கள் பற்றி புரிந்துகொண்டு, அது குறித்து அறிவுறுத்தலாமே தவிரவும் தேவையற்ற அதிகாரத்தை அவர்கள் மேல் செலுத்தக் கூடாது. இதனால் சிலருக்குத் தனிமைப்படுத்தப்படும் உணர்வு உருவாகும்.

இந்த வயதில் தனக்கென ஒரு தனி அடையாளமும் கருத்தும் உண்டு என்ற எண்ணம் மேலோங்கும். சாதாரணமாக ஐஸ் கிரீம் தேர்வு செய்வதில் தொடங்கி, முக்கியமான விஷயங்கள் வரை ஒவ்வொன்றிலும் தனக்கென தனித் தேர்வும், கருத்தும் இருப்பதாகக் கருதுவார்கள். அவர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டியது அவசியம். சிறிய விஷயங்களில் அவர்களின் தேர்வுக்கு மதிப்பளிக்கலாம். மாற்றுக்கருத்து இருந்தால் நட்பாய் பேசி புரியவைக்கலாம். முக்கியமான விஷயங்களில் அவர்களின் கருத்துகள் எப்படி உள்ளது என்பதைக் கவனித்து, அதே சமயம், சமூகத்தின் பார்வையில் அந்த விஷயம் எப்படி உள்ளது என்பதையும் புரியவைக்க வேண்டும்.

எதிர்பால் மேல் ஒருவித ஈர்ப்பு இந்த வயதில் ஏற்படும். இது இயல்பே. ஆனால் அவற்றை எப்படிக் கையாள்வது என்பதைக் கற்றுக்கொடுக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டநிலையில் விஷயங்களைக் கையாளும் பருவம் இது என்பதால் விளைவுகள் அறியாமல் செயல்படுவார்கள். அன்போடும், கண்டிப்போடும், நட்போடும் விஷயங்களை அவர்களுக்கு விளங்கவைக்க வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு பூப்பெய்துவதற்கு இரண்டு வருடங்களுக்கு உள்ளாகத்தான் அவர்கள் உடல் தீவிரமான வளர்ச்சி அடைகிறது (Peak Height Velocity). பொதுவாக, பூப்பெய்த்தியதுக்குப் பிறகு பெண்களின் உயரம் அதிகரிப்பது குறைவு. எனவே, இந்தக் காலகட்டத்தில் உடலுக்கு வலுவூட்டும் உணவுகள் உண்பது அவசியம்.

உடலின் அத்தியாவசிய தேவைகளான கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து; ஏ, சி, இ, டி, கே மற்றும் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள்; நார்ச்சத்து; நீர்ச்சத்து; இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், மாங்கனீஸ், துத்தநாகம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைந்த உணவுகளான அரிசி, இறைச்சி, முட்டை, பால், சிறுதானியங்கள், அனைத்து வண்ண காய்கறிகள், கீரைகள், பழங்கள் என ஆரோக்கியமான உணவுகளைத் தர வேண்டும்.

ஜங்க்ஃபுட்ஸ், கார்போனேட்டட் பானங்கள், சாக்லேட், செயற்கையான பழரச பானங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவை ஹார்மோன் சுரப்பை பாதிக்கும் என்பதால் இவற்றை இந்த வயதில் தவிர்ப்பது நல்லது. உடலின் தசை வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி சீராக இருக்க வேண்டியது அவசியம். எனவே, நீச்சல், சைக்கிளிங், ஏரோபிக்ஸ், நடனம் போன்ற உடல் உழைப்பு நிறைந்த பணிகளில் தினசரி அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஈடுபடலாம்.

தொகுப்பு: இளங்கோ கிருஷ்ணன்

20 – 25 வயது

சென்ற பருவத்தின் ஹார்மோன் மாற்றங்கள் யாவும் ஓரளவு நிதானமடைந்து உடலும் அவற்றுக்குக் கொஞ்சம் பழக்கமாகி இருக்கும் காலகட்டம் இது. மனதில் ஓரளவு தெளிவு இருக்கும். எதையும் சுயமாகத் தேர்ந்தெடுக்கும் பக்குவம் வந்திருக்கும். இந்தப் பருவத்தின் முதல் பாதி வரையிலும் சுயமாக எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதுதான் நல்லது.

படிப்பு முடிந்து வேலை, திருமணம் என்று வாழ்வின் அடுத்தடுத்த முக்கியமான கட்டங்களுக்குள் நகரும் பருவமாகவும் இதுதான் உள்ளது. குழந்தைப் பிறப்புக்கு ஏற்ற காலகட்டமும் இதுதான். குழந்தை பிறப்பு என்பது ஒரு தவம். ஒரு குழந்தை பிறக்கும்போது தன் அன்னையின் உடலில் உள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு அன்னையின் உடலை சக்கையாக்கிவிட்டுத்தான் இந்த பூமிக்கு வருகிறது. எனவே, ஒவ்வொரு பெண்ணும் இந்தப் பருவத்தில் உடலை வலுவாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆரோக்கியமான, சமச்சீரான உணவு, தினசரி எட்டு மணி நேரத் தூக்கம், தினசரி ஒரு மணி நேர உடற்பயிற்சி என ஹெல்த்தி லைஃப் ஸ்டைலுக்கு இங்கேயே அஸ்திவாரமிடுங்கள்.

The post பருவ மகளிர் பராமரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article