நன்றி குங்குமம் டாக்டர்
பருத்திப்பால் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நமது பாரம்பரிய தென்னிந்திய சத்தான பானம் ஆகும். பருத்தி விதையிலிருந்து பால் எடுத்து அதில் சுக்கு, மிளகுத்தூள், ஏலக்காய், சித்தரத்தை, தேங்காய்த் துருவல், வெல்லம் அல்லது கருப்பட்டி போன்ற பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. கிராமப்புறங்களில், பெரும்பாலும் விருந்தினரை வரவேற்க பருத்திப்பால் பரிமாறப்படுகிறது. பருத்திப்பாலில் வைட்டமின்கள், புரதம், நார்ச்சத்து, கொழுப்பு அமிலங்கள், கனிம சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் (Anti- oxidant) நிறைந்துள்ளன. பருத்திப்பாலின் நன்மைகள் குறிந்து தெரிந்து கொள்வோம்.
பருத்திப்பாலின் பயன்கள்
100 கிராம் பருத்தி விதைகளில், 23.1 கிராம் புரதம், 22.9 கிராம் கொழுப்பு, 43.2 கிராம் கார்போஹைட்ரேட், 3.5 கிராம் தாது (Minerals) மற்றும் 7.3 கிராம் ஈரப்பதம் உள்ளது.பருத்திப்பாலை ஸ்மூத்திகள், அடுமனை உணவுகள் (Baked Foods) மற்றும் பேக்கிங்கில் வழக்கமான பாலுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். பருத்தி விதையிலிருந்து பாலைப் பிரித்தெடுத்த பிறகு, பருத்தி விதை மாவை கோதுமை மாவு மற்றும் தினை மாவுக்கு ஒரு துணைப் பொருளாகப் உணவு தயாரிப்பதில் பயன்படுத்தலாம். பருத்திப்பாலைக் கொண்டு நிறைய உணவுகளை தயாரிக்கலாம். இந்த உணவுப் பொருட்களில் Tamcurd எனும் பருத்திப்பால் தயிர், சீஸ், யோகர்ட், ஐஸ்கிரீம், சாக்லேட், பருத்திப்பால் அல்வா மற்றும் பருத்தி கோவா ஆகியவை அடங்கும்.
பருத்திப்பாலுடன் வெல்லம் அல்லது 2% சுக்ரோஸ் கரைசல் மற்றும் 0.2% உப்பு சேர்க்க சத்தான சுவையான பானமாக இருக்கும். சுக்ரோஸ் மற்றும் வெல்லம் பருத்திப்பாலின் சுவையை மேலும் மேம்படுத்துகிறது. ஸ்ட்ராபெர்ரி அல்லது சீத்தாப்பழத்தின் பழக்கூழ் பருத்திப்பாலுடன் சேர்க்கப்பட்டால், அதன் சுவை, நறுமணம் மற்றும் நிலைத்தன்மையை அதிகரிக்கும். பருத்திப்பாலை 70 -80 டிகிரி செல்சியஸில் 10 முதல் 15 நிமிடங்களுக்கு சூடாக்குவது பேஸ்டுரைசேஷனுக்கு வழிவகுக்கும். இது பசு மற்றும் எருமைப் பாலுக்கு மிகவும் நல்ல மாற்றாகும்.
பருத்திப்பாலின் ஆரோக்கிய நன்மைகள்
பருத்திப்பாலை காலையில் காபி, டீக்கு பதில் பருகி வர நமக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதுடன் மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு ஆகிய பிரச்னைகளையும் சரி செய்கிறது. இதனை நீரிழிவு நோயாளிகளும் தாராளமாகக் குடிக்கலாம். பருத்திப்பாலை காலை வெறும் வயிற்றில் குடித்து வர அல்சர், வயிற்றுப்புண், குடல்புண் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்னைகளும் குணமாகும்.
பருத்திப்பால் சளி மற்றும் காய்ச்சலுக்கு சிறந்த தீர்வாகும். இது உடலை குளிர்விக்கிறது மற்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மாருக்கு மிகவும் நல்லதுஇது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது, வயிற்றுப் புண்ணை குணப்படுத்துகிறது மற்றும் வயிற்றுப் புழுக்களைக் குறைக்கிறதுரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு பண்புகள் உடலிற்கு ஆற்றலை அளிக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மேலும் தோல் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது,ரத்த கொழுப்பு அளவு மற்றும் ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்த உதவுகிறது.
பருத்திப்பால் பசுவின் பாலுக்கு மிகவும் நல்ல மாற்றாகும், எனவே லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் இதை உட்கொள்ளலாம்.பி.சி.ஓ.எஸ்-ஐத் தடுக்கிறது, மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குப்படுத்துகிறது, கருவுறுதலை மேம்படுத்துகிறது. உடலின் சகிப்பு தன்மையை அதிகரிக்கிறது. மனஅழுத்தத்தை குறைக்கிறது. பிரசவ வலியை எளிதாக்குகிறது.
புற்றுநோயைத் தடுக்கிறது மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவுகிறது. பருத்திப் பாலில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, இதனால் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.பருத்தி விதையில் கால்சியம் நிறைந்துள்ளது, இது எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. இதில் அதிக அடர்த்தி கொண்ட நல்ல கொழுப்பு (Good Cholesterol) இருப்பதாக நம்பப்படுகிறது மற்றும் குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரதத்தை வெளியேற்றுகிறது (Bad Cholesterol) நரம்பியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, கணையத்தின் நல்ல செயல்பாட்டை, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் நல்ல தூக்கத்தைத் தூண்டுவதாகவும் இருக்கிறது. உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க உதவுகிறது பருத்திப்பால் உட்கொள்ளும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
பருத்தி விதையில் கோசிபோல் (Gossypol) உள்ளது. இதை அதிக அளவில் உட்கொள்ளும்போது அல்லது சரியாக பதப்படுத்தாவிட்டால் உடலில் நச்சுத்தன்மையை அதிகரிக்கும். கடுமையான நச்சுத்தன்மையின் பொதுவான அறிகுறிகளில் சுவாசக் கோளாறு, உடல் எடை அதிகரிப்பு, அனோரெக்ஸியா, பலவீனம், பசியின்மை மற்றும் மரணம் ஆகும். எனவே, நன்கு பதப்படுத்தப்பட்ட பருத்தி விதையிலிருந்து தயாரிக்கப்பட்ட பருத்திப்பாலை உபயோகப்படுத்துவதே சாலச்சிறந்ததாகும்.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்
The post பருத்திப்பாலின் நன்மைகள்! appeared first on Dinakaran.