
புதுடெல்லி,
கொல்கத்தாவில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் மீது ஒரு பெண் ஒருவர் கடந்த 2014-ம் ஆண்டு புகார் அளித்திருந்தார்.
ஏற்கனவே திருமணமான அந்த முன்னாள் நீதிபதி, மனைவியை விவாகரத்து செய்து விட்டு, தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, தன்னுடன் நெருக்கமாக இருந்ததாகவும், ஆனால் பின்னர் திருமணத்துக்கு மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தார். அதன்பேரில், போலீசார் முன்னாள் நீதிபதி மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்தனர். கொல்கத்தா ஐகோர்ட்டு, முன்னாள் நீதிபதி மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. அதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதி பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, கொல்கத்தா ஐகோர்ட்டு அளித்த உத்தரவை ரத்து செய்ததுடன், முன்னாள் நீதிபதிக்கு முன்ஜாமீன் வழங்கியது.
இதுதொடர்பாக நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறுகையில், "ஆணும், பெண்ணும் பரஸ்பர உறவில் இருந்துவிட்டு, அந்த உறவு கசக்கும்போது குற்றவியல் வழக்கு தொடரும் போக்கு அதிகரிப்பதை கவனித்து வருகிறோம். எல்லா பரஸ்பர உறவையும், 'திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து ஏமாற்றினார்' என்று முத்திரை குத்த முடியாது. இருவருக்கும் இடையிலான உறவு சம்மதத்துடன் கூடியது. பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக நடந்ததாக கூற முடியாது. அதை கற்பழிப்பு என்று வாதிட முடியாது" என்று கூறினர்.