
சென்னை,
தமிழ் சினிமாவின் 80 மற்றும் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் குஷ்பு. இவர் பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் தமிழில் 'வருஷம் 16' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி முன்னனி நடிகையாக திகழ்ந்தார். அதனைதொடர்ந்து இயக்குனர் சுந்தர்.சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் தற்போது நடிப்பது மட்டுமின்றி அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் எடையை குறைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டையும் கடைபிடித்து தற்போது 'ஸ்லிம்' ஆக மாறி அசத்தியுள்ளார்.
இதற்கிடையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு நடிகை குஷ்பு பேசியதாவது, "உடல் எடையை குறைக்கும் இந்த பயணம் அற்புதமாக இருந்தது. சில நேரங்களில் சோதனையாகவும், சோர்வாகவும் இருந்தது. ஆனால் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், பொறுமை மற்றும் விடாமுயற்சி மனப்பான்மையை கைவிடக்கூடாது என்பது தான்.
ஒரே குறிக்கோளுடன் நடந்து செல்லுங்கள். உங்கள் இலக்கை நோக்கி கவனம் செலுத்துங்கள். வெற்றி கண்டிப்பாக உங்களை தேடி வரும். நமது முன்னேற்றம் பலருக்கும் வயிற்று எரிச்சலை ஏற்படுத்தலாம். எதையும் கண்டுகொள்ளவே கூடாது. கடினமாக உழைப்பது மட்டுமே நம் வேலை'', என்று தெரிவித்துள்ளார்.