
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த சிம்ரன், தற்போது வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார். பாலச்சந்தர் இயக்கிய பார்த்தாலே பரவசம், மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால், ராக்கெட்ரி ஆகிய படங்களில் மாதவனுடன் இணைந்து நடித்துள்ளார். இப்போது வரைக்கும் நடிகர் விஜய்க்கு சமமாக நடனம் ஆடிய ஒரே நடிகை என்ற பாராட்டைப் பெற்றவரும் அவர்தான். நடிகை சிம்ரன் திருமணத்துக்குப் பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
நாயகியாக அல்லாமல் நல்ல கதைகளில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அஜித்குமாரின் 'குட் பேட் அக்லி' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். . தற்போது, நடிகர் சசிகுமாருடன் 'டூரிஸ்ட் பேமிலி' படத்திலும் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் குமார் இயக்கி வரும் 'தி லாஸ்ட் ஒன்' படத்திலும் நடித்து வருகிறார்.
சசிகுமார் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்துள்ள 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் ரூ.20 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாட்டில் மட்டும் ரூ.13 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திரை வாழ்க்கையின் முக்கியமான படங்கள் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் "வாலி, பிரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய படங்களில் நான் செய்த கதாபாத்திரங்கள் மிகவும் வலிமையானவை. அப்போதுதான் நான் சரியான இடத்திற்கு வந்துள்ளதாக உணர்ந்தேன். சிறிய வேடம், பாடல் காட்சி என எதுவாக இருந்தாலும் என்னுடைய முழு பங்களிப்பை செலுத்தி நடித்தேன்.1999ம் ஆண்டுதான் சரியான கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என கற்றுக்கொண்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.