
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை திரைக்கு பின்னும், முன்னும் தொடங்கி உள்ளன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக. விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணி கடந்த 2017-ம் ஆண்டு முதல் நீடித்து வருகிறது. அதேபோல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்திருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டும்தான். ஆட்சியில் பங்கு கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்தது. இதற்கிடையில், மத்திய மந்திரி அமித்ஷா , 'தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். அதில் பாஜக அங்கம் வகிக்கும்' என்று கூறி கூட்டணிக்குள் ஒரு அணுகுண்டை போட்டார். இது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை அதிமுக மறுத்தது. தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்-அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று கூறினார்.
இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் 2026ல் தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாகவும் பேசியிருக்கிறார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் வருவதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறதா? அதேபோல பாமக மற்றும் இதர சிறு கட்சிகள் கூட்டணிக்கு வருமா? என்று அமித்ஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், "அதைப் பற்றி தற்போது சொல்ல முடியாது. நாங்கள் பல கட்சிகளை ஒரே கூட்டணியில் கொண்டு வர முயற்சிக்கிறோம்" என்று கூறினார். தொடர்ந்து அதிமுக-பாஜக கூட்டணியின் வாய்ப்புகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு நாங்கள் அமோக வெற்றி பெறுவோம் என்று அமித்ஷா கூறினார்.
தொடர்ந்து தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கேற்குமா? என்ற கேள்விக்கு, 'ஆம்' (YES) என பதில் அளித்தார். மேலும் தமிழ்நாட்டில் அதிமுக அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பாஜக நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
இதுதொடர்பாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியதாவது:-
திமுக கூட்டணி சுக்கு நூறாக உடையப் போகிறது. கம்யூனிஸ்ட் கட்சியும், திருமாவளவனும் தினமும் திமுக அரசை விமர்சனம் செய்து வருகிறார்கள். என்றைக்கு இந்தக் கூட்டணியிலிருந்து ஓடலாம்?' என்ற நிலையில் திருமாவளவன் இருக்கிறார். வைகோ அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறும் சூழலில் இருக்கிறார்.
எங்கள் கூட்டணி மிகவும் பலமாக உள்ளது. எங்கள் கூட்டணியின் "மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்" என்ற யாத்திரை மக்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. அதில் பாஜகவின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கிறோம். கூட்டணி விவகாரத்தில் அமித்ஷாவின் முடிவே இறுதியானது; அவர் சொல்வதே வேதவாக்கு. எனெனில் அவர்களே எங்களின் தேசிய தலைவர்கள். எங்களுடைய கூட்டணியில் பல கட்சிகளை சேர்ந்த பலர் இணைய உள்ளனர். இதனால் நாங்கள் இன்னமும் பலமாக இருக்கப்போகிறோம். என்று கூறினார்.
அமித்ஷா கருத்து குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,
கூட்டணி குறித்து நான் தான் தெளிவாகவே சொல்லிவிட்டேன்.. சட்டசபை தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்பையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். நன்றி வணக்கம்..! என்று கூறினார்.
கூட்டணி ஆட்சி என்பதில் பாஜக உறுதியாக இருக்கும் நிலையில், தனித்து அதிமுக ஆட்சி அமைக்கும் என்பதை மீண்டும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி உறுதிபடுத்தி வருகிறார். இதனால் அதிமுக - பாஜக கூட்டணியில் இரு கட்சி தலைவர்களின் கருத்துகளால் குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என அமித்ஷா திட்டவட்டமாக கூறியநிலையில், எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள பதில், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.