
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நெட்டூர் ரேஷன் கடைத்தெருவைச் சேர்ந்தவர் அருணாசலம் மகன் முப்புடாதி (28 வயது). கூலித்தொழிலாளி. இவருக்கும், கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
முப்புடாதிக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு முப்புடாதியை அவரது மனைவி பிரிந்து சென்றார். பின்னர் அந்த பெண், அம்பை பூக்கடை பஜாரில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார்.
இதையறிந்த முப்புடாதி நேற்று காலை தன் மனைவி வேலைபார்க்கும் கடைக்கு சென்றார். அங்கிருந்த மனைவியிடம் தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவரது மனைவி வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த முப்புடாதி ஏற்கனவே தன் கையில் மறைத்து வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் மனைவி உள்பட அக்கம்பக்கத்தினர் சத்தம்போட்டனர். இதற்கிடையே முப்புடாதி அங்கேயே சுருண்டு விழுந்து மயங்கினார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மாலையில் முப்புடாதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.