
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டம். காஞ்சிபுரம் வட்டம் மற்றும் திருப்பெரும்புதூர் வட்டங்களுக்குட்பட்ட, பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 19 கிராமங்களில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்க, 31.10.2023-ம் தேதியன்று தமிழ்நாடு அரசால் நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டது.
இந்நிலையில், புதிய பசுமைவெளி விமான நிலையத் திட்டத்தில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத்தொகை வழங்கக்கோரி நில உரிமையாளர்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளை ஏற்று, தமிழ்நாடு அரசு, கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு, நில மதிப்பினை உயர்த்தி, நில மதிப்பு நிர்ணயம் செய்து கடந்த 25.6.2025 அன்று ஆணை பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து, 5 கிராமங்களைச் ( பரந்தூர், பொடவூர், நெல்வாய், வளத்தூர் மற்றும் அக்கமாபுரம்) சேர்ந்த, 19 பட்டாதாரர்கள் (உள்ளுர் -8, வெளியூர் 11 பேர்), மாவட்ட கலெக்டரின் தலைமையில் நடத்தப்பட்ட நேரடிப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு, தாங்கள் நிலம் எடுப்பிற்கு சம்மதம் தெரிவித்து இன்று (9.7.2025) 17.52 ஏக்கர் பரப்பு நிலத்தினை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு பதிவு செய்து கொடுத்தனர். மேற்படி பதிவு செய்து கொடுத்த நில உரிமையாளர்கள் அனைவருக்கும் இன்றே நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகை ரூ.9.22 கோடி அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிட்டது என மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், தெரிவித்துள்ளார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.