மனித வாழ்க்கையை பொருத்தவரை பணிச்சூழல், கல்வி உட்பட பல காரணங்களை பொறுத்து நாம் வசிப்பிடத்தை தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ கட்டமைத்துக் கொள்கிறோம். அதே நேரம் திருவிழா, பண்டிகை உள்ளிட்ட கொண்டாட்டங்கள் என்றால் சொந்த ஊர்களுக்கு சென்று உறவினர்களுடன் மகிழ்ந்து திரும்புவது வழக்கம். தொடர் பண்டிகை விடுமுறை நாட்களில், சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு ரயில்கள், பஸ்கள் மற்றும் சொந்த வாகனங்களில் மக்கள் சென்று வருகின்றனர். நாளை ஆயுதபூஜை, மறுநாள் விஜயதசமி, ஞாயிறு சேர்த்து 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.
இம்மாதம் 31ம் தேதி தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வருகிறது. சில நிறுவனங்களில் தீபாவளிக்கு 2 நாட்கள் விடுமுறை விடுவது வழக்கம். அந்த வகையில் தீபாவளிக்கும் முன்கூட்டியே திட்டமிட்டால், வெள்ளி, சனி, ஞாயிறு சேர்த்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. மற்ற பண்டிகைகளை விட பொங்கல், தீபாவளிக்கு நாம் மிக முக்கியத்துவம் தருவது வழக்கம். எனவே, இந்த நேரங்களில் ரயில், ஆம்னி பஸ்கள், நெடுந்தொலைவு அரசு பஸ்கள், கார்களில் பயணத்திட்டத்தை பலர் பிளான் செய்திருப்பார்கள்.
ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் பஸ்கள், ரயில்களில் கூட்டம் அலைமோதும். ரயில்களில் முன்பதிவு முன்னரே முடிந்தாலும், கடைசி நேரத்தில் முன்பதிவில்லாத பெட்டிகளில் முண்டியடித்து ஏறியும், மூச்சு முட்ட நெரிசலில் பயணிப்பதும் வழக்கமான ஒன்றாகவே மாறி விட்டது. உடல்நிலையை கருத்தில்கொண்டுதான் முதியவர்கள் உள்பட பலர் ரயில்களில் பயணிக்கின்றனர். அப்படிப்பட்ட சூழலில் நெரிசல்மிக்க பயணங்கள் உடல்நலனை மேலும் பாதிக்கும். இதனை தவிர்க்க முன்கூட்டிய திட்டமிடல் மிகவும் அவசியமாகிறது.
எதிர்பார்த்த அளவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படாததால் மக்கள் பஸ் பயணத்தையே தேர்வு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு இதனை கருத்தில் கொண்டு சுமார் 2 ஆயிரம் பஸ்களை இயக்குகிறது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி. கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், ஆகிய இடங்களுக்கு முதல்கட்டமாக நேற்று 225 பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று 880க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதேபோல் பல்வேறு முக்கிய ஊர்களுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. விடுமுறை முடிந்து சனி மற்றும் ஞாயிறு தினங்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதேநேரம் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் புக்கிங் செய்யப்படும் ஆம்னி பஸ்கள், பண்டிகை காலங்களில் கட்டணத்தை தடாலடியாக உயர்த்தி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. இதனை கண்டறிந்து அபராதம் விதித்தாலும், சிலர் டிக்கெட்டுகளை பதுக்கி விற்கும் சம்பவங்கள் தொடர்கின்றன.
ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மக்களின் சூழலை புரிந்துகொண்டு, வழக்கமான கட்டணத்தையே வசூலிக்க வேண்டும். சிலர் குடும்பமாக கார் மற்றும் வாடகை வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போதைய சூழலில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டாலும், ஒரே நேரத்தில் கிளம்பும்போது சில இடங்களில் நெருக்கடியை தவிர்க்க முடியாது. கொண்டாட்டங்கள் முக்கியம்தான். மாற்றுக்கருத்தில்லை. அதேநேரம் எதில் பயணித்தாலும், கூடுதல் கவனத்தோடு செல்வது சிறந்தது.
The post பயணம்… கவனம்… appeared first on Dinakaran.