இந்தியாவுடன் நடந்த மோதலில் 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் - உறுதிப்படுத்திய பாகிஸ்தான்

4 hours ago 2

இஸ்லாமாபாத்,

இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்தது.

இந்த நிலையில், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. முன்னதாக 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில், பயங்கரவாத முகாம்களின் கட்டிடங்கள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டன. இந்த தாக்குதலில், குறைந்தது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று இந்திய ராணுவம் தெரிவித்தது.

இந்த மோதலில், இந்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 5 பேர் வீர மரணமடைந்ததாகவும், பாகிஸ்தான் தரப்பில் 40-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தங்கள் ஆயுதப்படைகளுக்கு ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து பாகிஸ்தான் ராணுவம் முதன்முறையாக வாய் திறந்துள்ளது.

மோதல் குறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

இந்தியாவுடன் 4 நாட்கள் நடந்த மோதலில் தாய் நாட்டை காக்கும் பணியில் நமது ராணுவ வீரர்கள் 11 பேர் உயிரிழந்தனர். 78 பேர் காயம் அடைந்தனர்.

பலியானவர்களில் முக்கிய தளகர்த்தரான உஸ்மான் யூசுப், தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த அவுரங்கசீப், நஜீப், பாரூக், முபாஷிர் மற்றும் அப்துல் ரகுமான், திலாவர் கான், இக்ரமுல்லா, வக்கார் காலித், முகமது அதீல் அக்பர், நிசார் ஆகியோர் அடங்குவர். உயிர் இழந்தவர்களுக்கு ராணுவம் அஞ்சலி செலுத்துகிறது.

இதேபோல் கடந்த 6-ந் தேதி நள்ளிரவு முதல் 7-ந் தேதி வரை இந்தியா நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் 40 பேர் உயிர் இழந்தனர். 121 பேர் காயம் அடைந்தனர். 

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் இறையாண்மைக்கு சவாலாக வரும் எந்தவொரு முயற்சியையும் எதிர்கொள்வோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article