பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்த 21 பேர் பலி: முதல்-மந்திரி பதவி விலக எதிர்க்கட்சிகள் கோரிக்கை

4 hours ago 3

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள 5 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்த 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக அமிர்தசரஸ் மாவட்டம் பால்ஹாலி, படலர்புரி மற்றும் மராரிகலன், தேர்வல் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளிகள், வேலை முடிந்ததும் அருகில் உள்ள மஜிதா என்ற காட்டுப்பகுதிக்கு சென்று சாராயம் அருந்துவது வழக்கம். நேற்று முன்தினமும் அவர்கள் வழக்கம்போல் அங்கு சென்று சாராயம் குடித்தனர்.

வீட்டுக்கு சென்ற தொழிலாளர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களது உறவினர்கள் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்கள் குடித்தது விஷ சாராயம் என தெரியவந்தது. இதில் 14 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தநிலையில் தற்போது பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. உயிர் இழந்தவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.

இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அந்த பகுதிக்கு மருத்துவ குழுவினரை அனுப்பிவைத்தனர். அவர்கள் வீடு வீடாக சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதனிடையே விஷ சாராயம் விற்றதாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். மெத்தனால் வினியோகம் செய்த ஒரு முக்கிய குற்றவாளியான சாஹிப் சிங் கைது செய்யப்பட்டார். அவர் 50 லிட்டர் மெத்தனாலை ஆன்லைனில் வாங்கி அதில் மற்ற பொருட்களை கலந்து 120 லிட்டராக மாற்றி உள்ளூர் சாராய வியாபாரிகளுக்கு விற்பனை செய்து உள்ளார்.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த முதல்-மந்திரி பகவந்த் மான், 'இது மரணம் அல்ல, கொலை. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தனது எக்ஸ் பதிவில் தெரிவித்திருந்தார். மேலும் அவர், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.

அதேசமயம் விஷ சாராய விற்பனையை தடுக்க தவறிய ஆம் ஆத்மி அரசின் முதல்-மந்திரி, சம்பந்தப்பட்ட துறை மந்திரி பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து உள்ளன. விஷ சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்தை போலீஸ் துணை கமிஷனர் சாக்ஷி சாவ்னி சந்தித்து விசாரணை நடத்தினார்.

இதற்கிடையே விஷ சாராய விற்பனையை தடுக்க தவறியதாக மஜிதா பகுதி துணை போலீஸ் சூப்பிரண்டு அமோலாக் சிங், போலீஸ் அதிகாரி அவதார் சிங் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Read Entire Article