
போர்ட் மோர்ஸ்பி,
ஆஸ்திரேலியா அருகே பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடாக பப்புவா நியூ கினியா உள்ளது. சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த நாடு சுற்றுலா தலங்களுக்கு பெயர் போனது. இங்குள்ள பொதுமக்கள் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.
சுமார் 13 லட்சம் பேர் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் பேஸ்புக் மூலமாக போலி செய்திகள், மற்றும் ஆபாச படங்கள் அதிகளவில் பரப்பப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் பேஸ்புக்குக்கு தடைவிதிக்கப்படும் என தகவல் வெளியாகி வந்தது.
இந்த நிலையில் பப்புவா நியூ கினியாவில் பேஸ்புக்குக்கு திடீரென தடை விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பேஸ்புக்கை பயன்படுத்த முடியாமல் சிரமம் அடைந்தனர். இது மக்களின் கருத்து சுதந்திரத்தையும், பேச்சுரிமையையும் பறிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.