சிலம்பம் மற்றும் கராத்தே போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு விருதுகளை அள்ளி வரும் சிறுமி பிரதியுக் ஷாவிற்கு வயது பன்னிரண்டு. ஆனால் அவர் பெற்றுள்ளதோ நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகள் மெடல்கள் மற்றும் பாராட்டுகள். சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி என்கிற சிறிய கிராமத்தில் உள்ள விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் சிறுமி பிரதியுக் ஷா. இந்த சிறு வயதில் விளையாட்டுத் துறையில் கௌரவ டாக்டர் பட்டம் வென்று அசத்தியுள்ளார் என்பதை நம்ப ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. தனது கல்வி மற்றும் விளையாட்டு சாதனைகள் குறித்து நம்மோடு அவர் பகிர்ந்து கொள்கிறார்.
உங்களது கராத்தே மற்றும் சிலம்பம் விளையாட்டின் மீதான ஆர்வம் குறித்து…
நான் எனது ஐந்தாவது வயதிலிருந்தே சிலம்பம் மற்றும் கராத்தே கற்று வருகிறேன். தற்போது ஏழாம் வகுப்பு படித்து வருகிறேன். சிலம்பம் மற்றும் கராத்தேயில் அதிக ஈடுபாட்டை கண்ட எனக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் போட்டியில் கலந்து கொள்வது குறித்த முறையான பயிற்சிகளை பயிற்றுவித்தனர். எனது ஆறாவது வயது முதல் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றுவருகிறேன். தற்போது அத்லெடிக் போட்டிகளிலும் கலந்துகொண்டு வருகிறேன். கராத்தேயில் எனது ஆசிரியர் திரு. மோகன் அவர்கள் தற்போது வரை அவரது மாற்றம் கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சியகத்தின் அறக்கட்டளையின் மூலமாக எனக்கு இலவசமாகவே பயிற்சி அளித்து வருகிறார். சிலம்பம் விளையாட்டை சேலத்தை சேர்ந்த ஆசிரியர் திரு. சிலம்பொலி விஜயன் சாரிடம் கற்று வருகிறேன்.
கிராமத்தில் இருக்கும் உங்களுக்கு இந்த விளையாட்டுகளுக்கான பயிற்சி வகுப்புகள் எளிதாக கிடைக்கிறதா?
நாங்கள் சேலம் மற்றும் தர்மபுரிக்கு இடையிலான காடையாம்பட்டியில் வசிப்பதால் கராத்தே கற்றுக் கொள்ள 60 கிலோமீட்டர் தூரம் பயணித்து வருகிறேன். சிலம்பம் கற்றுக்கொள்ள 30 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. மேலும் எனது பள்ளிக்கு செல்ல ஐந்து கிலோமீட்டர் தூரம் தினமும் பயணிகள் வேண்டியுள்ளது. வாழ்வில் எதையாவது சாதிக்க இந்த பயணதூரங்களையெல்லாம் கடந்து தானே ஆகவேண்டும். கராத்தே வகுப்பு வாரத்திற்கு ஒரு முறை சேலத்தில் எனது ஆசிரியர் கற்றுத் தருகிறார். எனது பள்ளி விடுமுறை தினங்களில் சென்னைக்கு பயணித்து அங்கேயே தங்கி கராத்தே பயிற்சியினை கற்று வருகிறேன். தற்போது நான்கு வருடங்களாக அத்லெடிக் விளையாட்டிலும் ஈடுபட்டு வருகிறேன்.
போட்டிகளில் கலந்து கொண்ட அனுபவங்கள் குறித்து …
கராத்தே மற்றும் சிலம்பத்தில் 100 க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். அதேபோன்று 10க்கும் அதிகமான மெடல்களையும் பெற்றுள்ளேன். அதில் ஏழு முறை தங்க பதக்கங்களை பெற்றுள்ளேன். இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளையும் விருதுகளையும் வென்றது மறக்க இயலாத அனுபவம். 2021ல் நேபாளத்தில் நான்கு தங்கப் பதக்கங்களை பெற்றேன். அதேபோல் 2022 அந்தமானில் 3 தங்க பதக்கங்களை பெற்றுள்ளேன்.
பரிசுகள் மற்றும் விருதுகள் குறித்து…
இதுவரை மாநில அளவில் 50 க்கும் மேற்பட்ட தங்கப்பதக்கங்களும், தேசிய அளவில் சிலம்பத்தில் 15 தங்கப் பதக்கம், கராத்தேவில் 30 தங்கப்பதக்கங்களும் பெற்றுள்ளேன். சர்வதேச அளவில் 1.நேபாளம் 2.அந்தமானில் சிலம்பம் 4 தங்கப் பதக்கம், கராத்தே 2 தங்கப்பதக்கம், அத்லெடிக் 100 மீட்டரில் ஒரு தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதுவரை ஏழுமுறை கின்னஸ் உலக சாதனை செய்துள்ளேன்.
முனைவர் பட்டம் குறித்து..
விளையாட்டில் நான் செய்த சாதனைகளுக்காக தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களிடமிருந்து மதிப்புறு முனைவர் பட்டம் வென்றது பெருமையான தருணமாக நினைக்கிறேன். சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இந்திய அளவில் மற்றும் நேபாளம் மற்றும் அந்தமான் போட்டிகளில் சர்வதேச அளவில் பதக்கங்களை வென்றதற்காக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அவர்களின் கரங்களால் கௌரவ டாக்டர் பட்டம் கிடைத்தது என்பதை எனது வாழ்வில் பெரும் சாதனையாக கருதுகிறேன். அதே போன்று மதுரை திருமலை நாயக்கர் கலை அறிவியல் கல்லூரி தமிழ்துறை சார்பில் 2 முறை விருது பெற்றுள்ளேன். தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லூரிசார்பில் இளம் சாதனையாளர் விருது உட்பட100 க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்துள்ளது.
விளையாட்டில் எதிர்கால திட்டங்கள் மற்றும் லட்சியங்கள் குறித்து..
கராத்தே விளையாட்டில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்கிற ஆசைகள் இருக்கிறது. தற்போது நான்கு வருடங்களாக அத்லெடிக் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறேன். அதற்கு முறையான பயிற்சி தேவை. அதற்கான ஆசிரியரை தேடிக் கொண்டு இருக்கிறேன். அத்லெடிக் விளையாட்டில் நிறைய சாதிக்க வேண்டும் என்கிற எண்ணங்கள் இருக்கிறது. எனது சிலம்ப ஆசிரியர் விஜயன் எனக்கு மிக சிறப்பான பயிற்சிகளை அளித்து வருகிறார். அதில் மேலும் நிறைய சாதிக்க வேண்டும். விளையாட்டுத் துறையில் மட்டுமல்ல படிப்பிலும் நான் முதல் மாணவி தான் என்கிறார் பன்னிரண்டே வயதான ஏழாம் வகுப்பு மாணவி பிரதியுக் ஷா. இவர் யோகாவிலும் தற்போது சாதித்து வருகிறார். இவரது தம்பி கவியரசுவும் கராத்தே விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாய குடும்பத்தில் பிறந்து விளையாட்டுத் துறையில் ஏதேனும் சாதிக்க நினைக்கும் பிரதியுக் ஷாவின் கனவுகள் வெற்றி பெற வாழ்த்தி விடை பெற்றோம்.
The post பன்னிரண்டு வயதிற்குள் டாக்டர் பட்டம் பெற்று அசத்தி வரும் சிறுமி பிரதியுக் ஷா! appeared first on Dinakaran.