தேசிய கல்வி கொள்கை – 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் கையெழுத்து போட மாட்டோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

9 hours ago 2

 

கடலூர்: “அப்பா” என்ற பெயரில் புதிய செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். “Aanaithu Palli Parent teachers Association” என்பதன் சுருக்கமே ‘APPA’ என்ற பெயரில் புதிய செயலி; தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செயலி, விழா மலர் ஆகிவற்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்; நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னை, தந்தை, ஆசிரியரை தெய்வம் என்று கூறுவார்கள். அன்னை, தந்தை, ஆசிரியரை தெய்வம் இங்கு மொத்தமாக கூடியுள்ளது யாரும் காணாத காட்சி.

கல்வித்துறையில் உலக அளவில் சாதனைகளை செய்து வருகிறோம். ஒவ்வொரு மாணவனும் தமிழ்நாட்டின் சொத்து என்ற அடிப்படையில் கவனித்து அவர்களை வளர்த்து வருகிறோம். அரசுப் பள்ளிகளில் 20,000க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அமைச்சர் அழைத்துச் சென்றுள்ளார். பிள்ளைகள் மீது பெற்றோருக்கு இருக்கும் அக்கறை அரசுக்கும் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை செயல்படுகிறது. அன்பில் மகேஸ் பொறுப்பு வகிக்கும் காலம், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலம்.

இந்தியாவிலேயே கல்வித் தரத்தில் தமிழ்நாடு 2ம் இடத்தில் உள்ளது. கல்வித்துறைக்கு எவ்வளவு முக்கியத்துவம் வழங்குகிறது என்பதை அனைவரும் உணர வேண்டும். கல்வியும் மருத்துவமும் நமது இரு கண்கள். தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை பாராட்டியுள்ளது. தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.2,152 கோடியை தர மறுத்து ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. நிதியை விடுவிக்க கோரினால் தமிழ் மீது பிரதமர் அக்கறை கொண்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் கூறுகிறார். தேசிய கல்விக் கொள்கை என்பது தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் வேட்டு வைக்கும் கொள்கை;

எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாம் எதிரி அல்ல; எந்த மொழியை திணிக்க நினைத்தாலும் எப்போதும் எதிர்ப்போம். தேசிய கல்விக் கொள்கை மாணவர்களை படிக்க வைப்பதற்கான கொள்கை அல்ல; பள்ளிக் கூடத்தை விட்டு துரத்துவதற்கான கொள்கை; சமூக நீதியை சிதைப்பதாக தேசிய கல்விக் கொள்கை உள்ளது. 3-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு, 5-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்பதை எப்படி ஏற்க முடியும்? 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படிப்பை தொடர விரும்பாத மாணவர்கள், அவர்களே வெளியேறலாம் என்று கூறுவதை என்ன சொல்வது?

ரூ.2,000 கோடி அல்ல, ரூ.10,000 கோடி கிடைக்கும் என்று சொன்னாலும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம். இந்தியை எங்கள் மீது திணிக்க நினைத்தால் தமிழர் என்ற ஒரு இனம் உண்டு, இந்தியை திணிக்க நினைத்தால் தமிழர்கள் தங்கள் குணத்தை காட்டுவோம். இந்தி திணிப்புக்கு எதிராக 85 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்கம் போராடிக் கொண்டிருக்கிறது. இந்தி பெல்ட் என்கிற மாநிலங்களில் மட்டும் கிட்டத்தட்ட 25 மொழிகள் அழிந்துவிட்டன. தமிழை அழிக்க எந்த ஆதிக்க மொழி நினைத்தாலும் அதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்.

The post தேசிய கல்வி கொள்கை – 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் கையெழுத்து போட மாட்டோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article