
திருமலை,
திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் 3 நாட்களாக பத்மாவதி பரிணய உற்சவம் நடந்து வந்தது. 3-வது நாளான நேற்று முன்தினம் மாலை உற்சவர் மலையப்பசாமி ஏழுமலையான் கோவிலில் இருந்து கருட வாகனத்திலும், உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் தங்கத் திருச்சி வாகனத்திலும் எழுந்தருளி ஊர்வலமாக வந்து நாராயணகிரி தோட்டத்தை அடைந்தனர். அங்குள்ள பத்மாவதி பரிணய உற்சவ மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு உற்சவர்களுக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டது.
கடந்த 2 நாட்களை போலவே உற்சவர்களுக்கு பூக்களால் அர்ச்சனை, புதிய வஸ்திரம் சமர்ப்பித்தல், ஊஞ்சல் சேவை போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது வேதப் பண்டிதர்கள் ரிக்வேதம், யஜுர்வேதம், சாமவேதம், அதர்வன வேதத்தை ஓதினர். கலைஞர்கள் இசை மற்றும் மேள, தாள வாத்தியங்களால் மங்களகரமான நிகழ்ச்சிகளை நடத்தினர். அன்னமாச்சாரியார் திட்ட கலைஞர்கள் லோகநாத்ரெட்டி, லாவண்யா குழுவினர் அன்னமாச்சாரியார் பக்தி சங்கீர்த்தனைகளை பாடினர். பத்மாவதி பரிணய உற்சவம் முடிந்ததும், சாமி-தாயார்கள் நாராயணகிரி தோட்டத்தில் இருந்து ஊர்வலமாக கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டனர். இதோடு 3 நாள் பத்மாவதி பரிணய உற்சவம் முடிந்தது.