
பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சுப்பண்ணா அய்யப்பன்( வயது 69). பிரபல வேளாண் விஞ்ஞானியான இவருக்கு கடந்த 2022ம் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இந்தநிலையில், மைசூரு விஸ்வேவரய்யா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சுப்பண்ணா குடும்பத்துடன் வசித்து வந்தார்.
கடந்த 8ம் தேதி முதல் சுப்பண்ணா அய்யப்பன் காணாமல் போய்விட்டதாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மைசூர் அருகே மாண்டியாவில் உள்ள காவிரி ஆற்றில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சுப்பண்ணா அய்யப்பன் சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் சுப்பண்ணா அய்யப்பன் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
அவரது செருப்புகள் மற்றும் இரு சக்கர வாகனம் ஆற்றின் கரையில் இருந்தது தெரிய வந்தது. தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மைசூருவில் உள்ள கே.ஆர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.