சென்னை: பத்மஸ்ரீ விருது பெற்ற 108 வயதான கோவை பாப்பம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்; கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 109 வயது நிரம்பிய ரங்கம்மாள் (எ) பாப்பம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக காலமான செய்தி அறிந்து துயரமும், வருத்தமும் அடைந்தேன்.
தொடக்கத்தில் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வந்த அவர், பிறகு இயற்கை விவசாயத்தின் மீது பற்று கொண்டு பணியாற்றி வந்தார். அந்த பகுதி விவசாய பெருமக்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார். வயது முதிர்ந்த நிலையிலும் தொடர்ந்து மேற்கொண்ட இவரது பணியை கௌரவிக்கும் வகையில் 2021 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது. சமீபத்தில் நடந்த தி.மு.க. பவள விழாவில் அவருக்கு தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டது.
இளமை பருவம் முதல் திராவிட இயக்க கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தி.மு. கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தமது இறுதிக்காலம் வரை பணியை தொய்வின்றி மேற்கொண்டவர். அவரது மறைவினால் அவர் பிறந்த தேக்கம்பட்டி கிராமமே சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது. ரங்கம்மாள் (எ) பாப்பம்மாள் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை பாப்பம்மாள் காலமானார்: செல்வப்பெருந்தகை இரங்கல் appeared first on Dinakaran.