பதவி போன பின்பும் பந்தா காட்டி டார்ச்சர் கொடுக்கும் ‘மலை’யை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

3 days ago 2

‘‘லாக்அப் ரெட்டை கொலை ஊருக்கு போஸ்டிங் போட்டாலே தலைதெறிக்க ஓடுறாங்களாமே இன்ஸ்பெக்டர்கள்..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘முத்து மாவட்டத்தின் தென் கோடியில் உள்ளது சாத்தான்குளம். இலை கட்சி ஆட்சியின் போது கொரோனா காலத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற இரண்டு வியாபாரிகளை லாக் அப்பில் வைத்து அடித்தே கொலை செய்த காக்கிகளால், இந்த ஊரை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. இந்த கொலை சம்பவத்திற்கு பிறகு அந்த காவல் நிலையத்திற்கு இன்ஸ் பதவிக்கு வருவதற்கே பலருக்கு அச்சமாம்.. ஏற்கனவே இருந்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜாவான இன்ஸ் ஒருவர் மோசடி வழக்கில் சிக்கி சஸ்பெண்ட் ஆயிட்டார்.

பின்னர் கைதும் செய்யப்பட்டார். இவரை தொடர்ந்து வந்த இரண்டு எழுத்து இன்ஸ்ம் வந்த ஒரு சில நாட்களிலேயே நெஞ்சு வலியால் உயிரை விட்டுட்டார். இந்த ஊருக்கு போஸ்டிங் போடுகிறேன் என்றாலே இன்ஸ்கள் தலைதெறிக்க ஓடி விடுகிறார்களாம்.. இதனால் கடந்த 4 மாதங்களாக அந்த காவல் நிலையத்திற்கு பெண் இன்ஸ் ஒருவர்தான் இன்சார்ஜாக இருந்தார். அவரும் பழைய இன்ஸ் அறைக்கு சென்றபோது காலில் சுளுக்கு ஏற்பட்டு மாட்டிக் கொண்டாராம்.. இதனால் அந்த இன்ஸ் அறையையே பூட்டி வைத்து விட்டனராம்.. அங்கு பணியாற்றும் போலீசாரும் அந்த அறைக்கு செல்வதில்லையாம்..

தற்போது புதிய இன்ஸ் ஒருவர் பதவி உயர்வில் அங்கு நியமிக்கப்பட்டுள்ளார். அதற்காக இன்ஸ் அறையை பல ஆயிரம் செலவழித்து புதுப்பிச்சிட்டாங்களாம்.. எனினும் இன்ஸ் வெளியே சென்றால் அந்த அறையை நெருங்க போலீசார் அச்சப்படுகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாநில தலைவர் பதவி போனாலும்கூட மலராத கட்சியின் மாஜியானவர் மண்டல நிர்வாகிகளுக்கு அன்பு கட்டளை போட்டு நெருக்கடி கொடுக்கிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மலராத கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டு பல நாட்களாகியும் மேற்கு மண்டலத்தை பொறுத்த வரை மாஜி தலைவர் மவுண்டன்தான் இன்னும் தலைவர் போல அங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறாராம்.. மேற்கு மண்டலத்தில் தனக்கு தான் செல்வாக்கு இருக்கிற மாதிரியே செட்டப்பை உருவாக்கி வருகிறாராம்.. ஏற்கனவே தலைவராக இருந்த போது கட்சியில் தனக்கு மட்டுமே செல்வாக்கு இருக்கிற மாதிரியே வெளியே செட்டப் செய்து டெல்லி தலைமையை நம்ப வைத்து வந்தவர் பதவி இழந்த பிறகும் அதே போலி பிம்பத்தை கட்டமைக்க முயற்சித்து வருகிறாராம்..

மேற்கு மண்டலத்தில் கட்சியில் இருக்கிற பெரும்பாலான மாவட்ட தலைவர்கள் மவுண்டன் நியமிச்ச ஆட்கள் என்பதோடு அவரோட நம்பிக்கையை பெற்ற ஆட்களாம்.. அதனால மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் கட்சி சார்பில் நடக்கிற ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு தன்னை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று அன்பு கட்டளை போட்டு மவுண்டன் நெருக்கடி கொடுக்கிறாராம்.. சமீபத்தில் மஞ்சள் மாவட்டத்தில நடந்த போராட்டத்துல இப்படித்தான் கலந்துகொண்டாராம்.. மலராத கட்சிக்கு புதிய தலைவரை நியமிச்ச பிறகும் கூட மேற்கு மண்டலத்தில் இருக்கிற மாவட்ட தலைவர்கள், ஒன்றிய, நகர தலைவர்களோட லெட்டர் பேடில் மவுண்டனின் போட்டோதான் ஜொலிக்குதாம்..

புதிய தலைவரின் படம் பெயரளவுக்கு கூட இல்லையாம்.. சமீபத்தில் இந்த விவகாரம் மான்செஸ்டர் மாவட்டதுல இருக்கிற தென்னைக்கு பெயர் போன ஊரில் பூதாகரமாக வெடிச்சிருக்கு.. புதிய தலைவர் படம் போடாம லெட்டர் பேடு பயன்படுத்தக்கூடாதுன்னு புதிய தலைவரோடு ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினதோட இந்த விகாரத்தை புதிய தலைவரின் கவனத்திற்கு கொண்டு போயிருக்காங்களாம்.. தேசிய அளவுல ஏதாவது பதவி கிடைக்கிற வரைக்கும் பதவி இழந்தாலும் தனக்குதான் செல்வாக்கு இருக்குதுன்னு இப்படியே ஏதாவது உருட்டிக்கிட்டே இருந்தா தான் தேசிய தலைமையோட கவனத்தை ஈர்க்க முடியும்னு மவுண்டன் நம்புகிறாராம்..

அதற்காக புதிய தலைவரோடு படம் கூட லெட்டர் பேடில் போடாமல் டம்மியாக்கிறது எந்த வகையில் நியாயம்னு புதிய தலைவர் ஆதரவாளர்கள் கொந்தளிக்க ஆரம்பிச்சிருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.‘‘மாங்கனி மாநகரில் த்திரி ஸ்டார் காக்கி கேட்ட கம்பி வேலியால ரவுண்டனாவில் தண்ணீர் பந்தலுக்கு நட்டுன கால் மட்டும்தான் இருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வேலியே பயிரை மேய்ந்த கதை ஒன்று மாங்கனி மாநகர காக்கி டிபார்ட்மெண்டில் நடந்துச்சாம்.. அக்னி நட்சத்திர வெயிலுக்கு ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தண்ணீர் பந்தலை திறந்துக்கிட்டு இருக்காங்க..

சில இடங்களில் ரவுண்டானா பகுதிகளில் தன்னார்வலர்கள் பந்தல் அமைச்சு, டூவீலர்கள் ஓட்டுனர்களுக்கு ஒரு நிமிடநேரம் ஆறுதல் தர்றாங்க.. இதுபோலவே மாங்கனி நகரில் தன்னார்வ அமைப்பு பந்தல் போடுவதற்கு அப்பகுதியில் உள்ள ஸ்டேசனில் அனுமதி வாங்கினாங்களாம்.. போடுகிற பந்தல் ஸ்ட்ராங்கா இருக்கும் வகையில் சில லட்சங்களை செலவு செஞ்சி வேலையை தொடங்கினாங்களாம்.. அப்போது ஒரு த்திரி ஸ்டார் ஆபீசர், மிடுக்கான உடையில் ரவுண்டானாவுக்கு போயிருக்காரு..

தண்ணீயா துட்டு செலவு செய்றீங்களே.. இதுக்கெல்லாம் உங்களுக்கு எங்கிருந்து துட்டு வருதுன்னு ஒரு செம கேள்விய கேட்டிருக்காரு.. சமூக நலனுக்காக செல்வந்தர்கள் கொடுக்கும் துட்டைத்தான் செலவு செய்றோமுன்னு பதில் சொல்லியிருக்காங்க.. இதனை துல்லியமா கேட்ட அந்த ஆபீசரு, அந்த பணத்துல எனது தோட்டத்துக்கு கம்பி வேலி போட்டுத் தாங்களேன்னு ஒரு கேள்விய கேட்டிருக்காரு.. அதுவும் ஆடு, மாடுகள் தோட்டத்துக்குள்ளாற வந்துடுதுங்க..

பயிர்களையெல்லாம் நாசம்பண்ணிருதுங்கன்னு அப்பாவியா கேட்ருக்காரு.. தனிப்பட்டவர்களின் தோட்டத்துக்கெல்லாம் இந்த பணத்துல செலவு செய்ய முடியாதுங்கன்னு பதில் சொல்லியிருக்காங்க.. அப்படியா விவகாரமுன்னு சொல்லிட்டு போயிருக்காரு அந்த ஆபீசரு.. அதற்கு அப்புறம் என்ன தான் நடந்ததுன்னு கேட்டா.. ரவுண்டானாவில் நட்ட கால் மட்டும் இருக்கு.. பந்தல் இன்னும் போடலியே என்பதுதான் புதுக்கதையாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post பதவி போன பின்பும் பந்தா காட்டி டார்ச்சர் கொடுக்கும் ‘மலை’யை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article