‘‘பதவி பறிக்கப்பட்டவரை இழுக்க தாமரை கோஷ்டி பிரம்மபிரயத்தனம் பண்ணுது போல..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கடைக்கோடி மாவட்டத்தில் பதவி பறிக்கப்பட்ட இலை கட்சி செயலாளர் சுந்தரமானவரை தங்கள் வசம் இழுக்க தாமரை கட்சி பல விதங்களில் முயற்சி செய்து வருகிறார்களாம். அதன் மூலம் அவர் வசம் உள்ள தொகுதியையும் கைப்பற்றி விடலாம் என்பது திட்டமாம். அதற்காக தாமரை கட்சியின் மாநில தலைவர் முதல் எம்எல்ஏ வரை ‘வாங்க வாங்க’ என்று தங்கள் கட்சிக்கு அழைப்பு விடுத்து வருகிறார்களாம். தாமரை கட்சியின் ஆதரவு அமைப்பு தலைவர்களுடன் சந்திப்பு, ஆன்மிக விழாக்களில் பங்கேற்பு என்று சகஜமாக இருந்து வந்த இலை கட்சி செயலாளரின் நடவடிக்கையின்பால் ஈர்க்கப்பட்டு அவரை எப்படியாவது தங்கள் வசம் இழுக்க , தாமரை கட்சியினரின் எண்ணமாக இருந்தாலும் அதற்கு வாய்ப்பு இல்லை என்றே கூறுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். பதவி பறிக்கப்பட்டு 24 மணி நேரம் கடந்த பின்னரும் யாரையும் அப்பதவிக்கு சேலம்காரர் இதுவரை நியமிக்காததால் அண்ணனே மீண்டும் அதே பதவியில் வருவார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பிஎப் பணம் மோசடியில் சிக்கிய அதிமுக பிரமுகருக்கு உதவிய அதிகாரிகள் எஸ்கேப் ஆகிவிட்டார்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புரம் மாவட்ட நகராட்சியில் தொழிலாளர்களின் பிஎப் பணத்தை கோடிக்கணக்கில் சுருட்டிய அதிமுக நிர்வாகியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருக்கிறார்களாம். இதற்கு பின்னணியில் கருவூலம், நகராட்சி துறை ஊழியர்களும் உடந்தையாக இருந்திருக்கிறார்களாம். கைதான அதிமுக பிரமுகர் நகராட்சியில் ஒப்பந்த ஊழியராகவோ, வேறு பணியிலோ ஈடுபடவில்லை. அங்கு இருக்கும் ஒரு சில அதிகாரிகள், ஊழியர்கள் மூலமாக நகராட்சிக்குள் அறிமுகமாகி வரவு செலவு கணக்குகளை பார்த்து வந்திருக்கிறாராம். தனிநபர் ஆன அவருக்கு சுதந்திரம் கொடுத்து, பாஸ்வேர்டு கொடுத்து பணத்தை பங்கிட்டது அரசுத்துறை அதிகாரிகள் தான் என்று தகவல் கசிந்துள்ளதாம். விசாரணையில் வெளிப்படையாக தகவல் வந்தும் அவர்களை தப்பிக்க விட்டிருக்கிறதாம் காக்கித் துறை. காக்கித் துறைக்கும் கரன்சியை வீசியதால் கைதான அதிமுக நிர்வாகிக்கு ராஜ மரியாதையுடன் உபசரிப்பு அளிக்கப்பட்டதாம். விசாரணைக்கு வந்த இரண்டு நாட்களும் செம கவனிப்பு நடைபெற்றதாம். எனவே இதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘டிரான்ஸ்பர் போட்டும் போக மட்டேன்னு அடம்பிடிக்குறாராராமே கார்ப்ரேஷன்ல ஒருத்தரு..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் கார்ப்பரேஷன் 4 மண்டலங்களாக பிரிச்சு பணிகள் நடந்து வருது. இதுல ஒவ்வொரு மண்டலத்துக்கு 2 வார்டு அல்லது 3 வார்டுன்னு சேர்த்து வரி வசூல் செய்றதுக்கு பில் கலெக்டர்ஸ்சை நியமிச்சிருக்காங்க. இவங்க பல வருஷமா ஒரே இடத்துல பணிபுரிஞ்சு வந்திருக்காங்க. இதனால சில குளறுபடிகள் நடந்ததாக புகாரும் இருக்குறதாக சொல்லிக்குறாங்க. இந்த நிலையிலத்தான், கார்ப்பரேஷன்ல இருக்குற பில் கலெக்டர்ஸ்சை ஒட்டுமொத்தமாக டிரான்ஸ்பர் செஞ்சாங்க.
இதுல ஒன்னாவது மண்டலத்துல இருக்குற ஒருத்தரு மட்டும், மெடிக்கல் காரணம் காட்டி டிரான்ஸ்பர் போகலையாம். மெடிக்கல் முடிஞ்சு இன்னும் அந்த டிரான்ஸ்பர் இடத்துக்கு போகவில்லையாம். அவருக்கு ஒன்னாவது மண்டலத்துல செல்வாக்கு அதிகமாக இருக்குதாம். இதனால யார் சொல்றதும் அங்க எடுபடவில்லையாம். இப்படி ஆளாளுக்கு செல்வாக்கு காட்டுனா எப்படி கார்ப்பரேஷன்ல ஒழுங்கா ஒர்க் நடக்கும்னு பரபரப்பா பேசிக்கிறதோடு, இதுக்கெல்லாம் யார் தான் முடிவு கட்டுவாங்களோ தெரியலையேன்னு புலம்புறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பார்ப்பதற்கு யாருமே வருவதில்லை என கவலையில் இருக்கிறாராமே பலாப்பழக்காரர்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஹனிபீ மாவட்டத்தில் ஒரு காலத்தில் பலாப்பழக்காரர் சொந்த ஊரான பிக்பாண்ட்க்கு வந்தால் அவரை சந்திக்க என இலைக்கட்சி நிர்வாகிகள் கூட்டமாக இருப்பார்கள். கட்சியானது சேலத்துக்காரர் கண்ட்ரோலில் சென்று விட்டதால், மாவட்டத்தில் இவருக்கென இருந்த ஆதரவாளர்கள் கூட எதிர் முகாமுக்கு சென்று விட்டனர். இதனால் சொந்த ஊருக்கு இவர் வரும் தகவல் கூட வெளியே கசிவதில்லையாம். சமீபத்தில் தனது வீட்டில் தங்கியிருந்தவர், பழைய நினைப்பில் வீட்டிற்கு வெளியே தன்னை பார்க்க யாராவது காத்திருக்கிறார்களா என அவரது பாதுகாப்பு அதிகாரியிடம் கேட்டுள்ளார். யாரும் இல்லையென தகவல் வந்ததால் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி விட்டதாக அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் கவலையுடன் கூறி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க பிக்பாண்டில் இலைக்கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள நகர செயலாளரின் செயல்பாடானது இலைக்கட்சியினரை மிகவும் புலம்ப வைத்து வருகிறதாம். இவர் தூங்கா நகர் மாவட்டத்திற்கு அருகே உள்ள வடமாநில நதி மாவட்டத்தை சேர்ந்த பைனான்சியர். தனது தொழிலுக்காக பிக்பாண்ட் நகருக்கு வந்து தங்கிவிட்டார். வந்த இடத்தில் பதவி கிடைத்ததால் மூத்த நிர்வாகிகள் உட்பட யாருடனும் சரிவர பேசுவதில்லையாம்.
முறையாக தேர்தல் பணியும் செய்யவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. இப்படியே சென்றால் ஹனீபீ மாவட்டம் மீண்டும் பலாப்பழக்காரர் கைக்கு சென்று விடும். மாற்றுங்கள் என போர்க்கொடி உயர்த்தப்பட்டுள்ளதாம். தகவலறிந்து பைனான்சியரான அவரை கைக்குள் போட்டுக்கொள்ள பலாப்பழக்காரர் திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவிக்கிட்டிருக்கு…’’ என்றார் விக்கியானந்தா.
The post பதவி பறிக்கப்பட்டவரை இழுக்க படாதபாடு படும் தாமரை பார்ட்டிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.