பதவி பறிக்கப்பட்டவருக்கு மீண்டும் பதவி கொடுத்ததால் தாமரை கட்சியில் நடக்கும் மோதல்களை பற்றி சொல்கிறார் : wiki யானந்தா

2 hours ago 1

‘‘இலைக்கட்சி தலைவரை உலக லெவலுக்கு கூவுகூவுவென கூவிய பேச்சாளர் பெயர் சொல்லும் அளவுக்கு ஒருபதவிக்கூட கிடைக்கலையேன்னு ஏக்கத்தில் தவிக்கிறாராமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவர் அவரது சொந்த ஊரான மாங்கனி மாவட்டத்துல கட்சியின் மூத்த முன்னோடிகளை ஓரம் கட்டிவிட்டு, புது ரத்தம் பாய்ச்சி வருகிறாராம்.. கரைவேட்டி கட்டத் தெரியாத சின்னஞ்சிறு இளைஞர்களுக்கு வட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்காம்.. ஆனால் இலைக்கட்சி தலைவரை ஆஹா, ஓஹோ என துதிபாடி வரும் ஒருவருக்கு எதுவுமே கிடைக்கலையாம்.. கட்சி ரெண்டா உடைந்த நேரத்தில் சமூக வலைதளங்களில் மணியானவரை கைகாட்டினாங்களாம்.. இவரும் மலராத கட்சியில் இருந்தபோது அக்கட்சியின் சித்தாந்தம் எனக்கு தெரியுமுன்னு உடுட்டுவாராம்… அதேபோல இலைக்கட்சி தலைவர் மகிழ்ச்சியாக முகம் சிவக்கும் வகையில் எதிரணியை சேர்ந்தவர்களை வறுத்தெடுப்பாராம்.. குறிப்பாக இலைக்கட்சி தலைவருக்கு பிடிக்காத சின்னமம்மி, குக்கர்காரர், தேனிக்காரர், மலராத கட்சியின் மாஜி போலீஸ்காரர் என அனைவரையும் படுபயங்கரமாக பேசுவாராம்.. அப்போதுதான் இலைக்கட்சி தலைவர் ஹேப்பியாக இருப்பாருன்னு இவர் நினைச்சிகிடுவாராம்.. அதிகபட்சமாக உலக நாயகனே இலைக்கட்சி தலைவருதான்னும் சொல்லுவாராம்.. என்னடா இது.. கொடுத்த காசுக்குமேல கூவுறானேன்னு அவரோடிருப்பவர்கள் சொல்லி கிண்டலடிப்பாங்களாம்.. இவ்வளவு கூவு கூவுவென கூவியும் பெயர் சொல்லும் வகையில் ஒரு பதவி கூட தனக்கு கிடைக்கலையேன்னு ஏங்குறாராம் அந்த சமூக வலைதளமணியான பேச்சாளர்.. இது தொடர்பாக இலைக்கட்சி தலைவரின் நண்பரை பார்த்தும் எதுவுமே நடக்கலையாம்.. என்றாலும் அவரது மனசை தளரவிட விடாமல் அவரோடிருக்கும் அடிப்பொடிகள் அவரை உசுப்பேத்திக்கிட்டே இருக்காங்களாம்.. ‘கவலைப்படாமல் இருங்க. பெயர் சொல்லும் அளவுக்கு பதவி உங்களைத்தேடி இலைக் கட்சி தலைவர் கொடுப்பாரு’ன்னு சொல்றாங்களாம்.. ஆனால் கடைசிவரை அவர் கூவிக்கொண்டேதான் இருக்கவேண்டும், என இலைக்கட்சி தலைவரை நன்கு தெரிந்த சில அடிப்பொடிகள் அடிச்சி சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பதவி பறிக்கப்பட்டவருக்கு மீண்டும் மாவட்ட தலைவர் பதவி கொடுக்கப்பட்டதால் மலராத கட்சியில் நிர்வாகிகள் மூன்று கோஷ்டிகளாக பிரிந்து அடிச்சுக்கிறாங்களாமே தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புரம் என முடியும் கடல் மாவட்ட மலராத கட்சியில் கோஷ்டி சண்டை நாடறிந்தது.. வீடு புகுந்து கொலை முயற்சியில் ஈடுபடும் அளவுக்கு கோஷ்டி மோதல் உச்சம் அடைந்திருந்தது. இங்கு மாவட்ட தலைவராக இலங்கையின் மாஜி ஸ்பின்னர் பெயர் கொண்டவர் நீண்ட காலமாக இருந்து வந்தார். இவரிடமிருந்த மாவட்ட தலைவர் பதவி, கடந்த 2022ல் சூரியன் பெயரைக் கொண்டவருக்கு கொடுக்கப்பட்டது. இதனால் இரு தரப்பினரும் மாறிமாறி வார்த்தைப் போரில் ஈடுபட்டு வந்தாங்க.. இதையடுத்து அடுத்த ஆண்டே அவரிடம் இருந்து மாவட்ட தலைவர் பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து மாஜி ஸ்பின்னர் தனது நெருங்கிய ஆதரவாளரான அடைமொழி பெயரைக் கொண்டவரை மாவட்ட தலைவராக்கினார்.. தற்போது இவரையும் நீக்கி விட்டு, ஏற்கனவே மாவட்ட தலைவராக நீண்டகாலம் பதவியில் இருந்து பறிக்கப்பட்டவருக்கே மீண்டும் தலைவர் பதவியை கொடுத்திருக்காங்க… இதனால், மாவட்டத்தில் மலராத கட்சி நிர்வாகிகள் 3 கோஷ்டிகளாக பிரிந்து அடிச்சுக்கிறாங்களாம்… இதையடுத்து அடைமொழிக்காரர் தரப்பு மாவட்டத்தில் மூன்றாவது அணியை செயல்படுத்த தீவிரமாக செயல்பட தொடங்கியுள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நெருக்கமானவர் பாதிக்கப்பட்டதால உயர் அதிகாரி காட்டும் கெடுபிடியால் சிறுகுறு வியாபாரிகளின் முணுமுணுப்பு தான் எல்லா இடமும் ஒலிக்கிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சுற்றுலாவுக்கு பெயர்போன புதுச்சேரியில் நள்ளிரவு 12 மணியை கடந்தும் கடைகள், உணவகங்கள் திறந்திருக்குமாம்.. சமீபத்தில் காக்கி உயர் அதிகாரிக்கு நெருக்கமானவர் பாதிக்கப்படவே தடாலடியில் இறங்கியுள்ளதாம் அதிகாரி தரப்பு.. அதாவது உணவகங்கள், தள்ளுவண்டி கடைகளை இரவு 11 மணிக்கு முன்பே மூட வேண்டுமென இரு தினங்களாக கறாராக நடந்து கொள்கிறார்களாம்.. காக்கிகளின் இந்த கெடுபிடியால் சிறுகுறு வியாபாரிகள் முடங்கி கிடக்கிறார்களாம்.. அப்பாவி மக்களும், சுற்றுலாவாசிகளும் பாதிக்கப்பட்டு குறைந்த கட்டணத்தில் உணவு கிடைக்காமல் தவிக்கிறார்களாம்.. அதேவேளையில் பெரிய பெரிய ரெஸ்ட்ரோ பார்கள் நள்ளிரவு 1 மணிக்கும் திறந்திருக்கிறதாம்.. அரசாங்க நடைமுறையை பின்பற்ற வேண்டியதுதான் காக்கிகளின் வேலையே தவிர, தனி நபருக்காக சிறுகுறு வியாபாரிகளின் வயிற்றில் அடிப்பது மிகவும் தவறு என்ற முணுமுணுப்புதான் எங்கும் ஒலிக்கிறதாம்.. சாமானியர் பாதிக்கப்பட்டிருந்தால் இத்தகைய நடவடிக்கை இருந்திருக்குமா என்ற கேள்வியும் பரவலாக எழும்பி உள்ளதாம்..
’’ என்றார் விக்கியானந்தா.

The post பதவி பறிக்கப்பட்டவருக்கு மீண்டும் பதவி கொடுத்ததால் தாமரை கட்சியில் நடக்கும் மோதல்களை பற்றி சொல்கிறார் : wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article