வேலூர்: பதற்றமான சூழ்நிலையில் விமர்சனம் என்ற பெயரில் சிந்தூர் ஆபரேஷனுக்கு எதிராக தவறான கருத்துக்களை பதிவிட கூடாது என வேலூரில் திருமாவளவன் தெரிவித்தார். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த விசிகவினரின் வேலூர் மண்டல செயற்குழு கூட்டம் வேலூரில் நேற்று நடந்தது. இதில், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொள்ளும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பாராட்டுகிறோம்.
அந்த வகையில் அதை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று(நேற்று) மேற்கொண்ட பேரணியில் விடுதலை சிறுத்தை கட்சியும் பங்கேற்றது. இந்த நடவடிக்கை பயங்கரவாத சக்திக்கு எதிராக உள்ளதால் அனைத்து தரப்பும் ஆதரிக்கிறோம். அதேவேளையில் இது இந்தியா, பாகிஸ்தான் இடையே யுத்தமாக மாறிவிடக்கூடாது. போர் வேண்டாம் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள். பேரழிவு ஆகிவிடக்கூடாது, இந்திய மக்களும் போரால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற கவலையோடு போர் வேண்டாம் என வேண்டுகோளை வைக்கிறோம். இந்த சிந்தூர் ஆபரேஷனுக்கு எதிராக தவறான கருத்துக்கள் பதிவிடுவது தவறானது.
பிழையானதும் கூட. இந்தப் பதற்றமான சூழ்நிலையில் விமர்சனம் என்ற பெயரில் எதிர் கருத்துக்கள் பதிவிடக்கூடாது. இஸ்லாமியர்கள் இந்தியர்கள் தான். மண்ணின் மைந்தர்கள் தான். அவர்களுக்கு எதிரான வெறுப்பை திட்டமிட்டு பரப்புவது ஏற்புடையதல்ல. இந்தியாவைப் பொறுத்தவரை மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியல், சமூக பிரிவினை வாதம் கூடாது என்பதை வேண்டுகோளாக வைக்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்பது வேறு, இரண்டு நாடுகளுக்கு இடையே போர் என்பது வேறு. இரண்டு நாடுகளுக்கு இடையேயான போராக மாற்றுவதற்கு பலரும் முயற்சிக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post பதற்றமான சூழ்நிலையில் விமர்சனம் என்ற பெயரில் சிந்தூர் ஆபரேஷனுக்கு எதிராக தவறான கருத்து பதிவிட கூடாது: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.