தனியார் பள்ளிகளை மிஞ்சும் சென்னை மாநகராட்சி பள்ளிகள்: இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இரண்டு மடங்காக உயர்வு

3 hours ago 1

சென்னை: அரசு பள்ளிகள் என்றாலே போதிய கட்டமைப்பு வசதிகள் இருக்காது, மாணவர்களிடம் கற்றல் குறைபாடு இருக்கும், நவீன தொழில்நுட்பங்களை அவர்கள் அறிந்து வைத்திருக்க மாட்டார்கள் என்று இருந்த காலம் மாறி, தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, அரசுப் பள்ளி மாணவர்களையும் திறம்பட தயார் செய்யும் நோக்கில், தமிழக அரசு கல்வி துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியுள்ளது.

மேலும் அரசுப் பள்ளிகளுக்கு தனி கவனம் செலுத்தப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை மாநகராட்சி பள்ளிகளை சர்வதேச தரத்தில் கொண்டு வருவதற்கான கட்டமைப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சென்னையில் பாழடைந்த பள்ளிகளின் கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டு, அப்பள்ளிகளை எல்லாம் புதிதாகவோ சீரமைத்தோ ஸ்மார்ட் வகுப்பறைகளாக சென்னை மாநகராட்சி மாற்றியுள்ளது.

இதனால், தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் சென்னை மாநகராட்சி பள்ளிகள் மாற்றப்பட்டு வருவதால், தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற மோகம் குறைந்து சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தனியார் பள்ளிகளில் மட்டுமே இருந்த ஸ்மார்ட் வகுப்புகள் தற்போது சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் அமைக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி தரம் அதிகரித்து வருகிறது.

மேலும்பாழடைந்து இடிந்து கிடந்த கட்டிடங்கள் எல்லாம் புதுப்பிக்கப்பட்டு தனியார் பள்ளிகளை போன்று மாற்றப்பட்டுள்ளது. மேலும் கட்டமைப்பு வசதிகள் எல்லாம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, பல்வேறு சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு பல்வேறு அம்சங்களை சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.

அதாவது, சென்னை மாநகராட்சியில், 35 மேல்நிலை, 46 உயர்நிலை, 130 நடுநிலை, 206 தொடக்கப் பள்ளிகள் என, 417 பள்ளிகள் உள்ளன. இங்கு, எல்.கே.ஜி., யூ.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மழலையர் பள்ளியில் காற்றோட்டமான வகுப்பறைகள், பச்சை வண்ணப்பலகைகள், ஸ்மார்ட் போர்டு, விளையாட்டுடன் கல்வியில் ஆர்வத்தை துாண்டும் வண்ண மயமான புத்தகங்கள் உள்ளிட்டவை உள்ளன. புத்தகப் பைகள், காலணிகள், அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன.

பள்ளி சீருடைகள், எழுது பொருட்கள், பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், காலை சிற்றுண்டி, பள்ளிக்கு 100 சதவீதம் வருகை தந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, மாலை சிற்றுண்டியுடன், மாலைநேர சிறப்பு வகுப்புகள் உள்ளிட்டவை ஏற்படுத்தி தரப்படுகிறது.

தற்போது, ஆட்டோக்களில் சேர்க்கைக்கு பிரச்சாரம் செய்யப்படுகிறது. தவிர பள்ளிகளின் அருகில் உள்ள தெருக்கள், வீடுதோறும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் சென்று மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன் எதிரொலியாக, மாணவர் சேர்க்கை அதிகரிப்பு, தேர்ச்சி விகிதம் உயர்வு, மற்றும் தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது ஒட்டுமொத்த கல்வித் தரத்தில் அதிகப்படியான முன்னேற்றம் காணப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் 90,000 ஆக இருந்த சேர்க்கை, 2021-22 கல்வியாண்டில் 1,15,580 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, பல புதிய மாணவர்கள் சேர்க்கைக்காக ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர், இதனால் மாணவர் சேர்க்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது நடந்து முடிந்த பிளஸ் 2 பொது தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 88.12 சதவீதமாக ஆக உயர்ந்துள்ளது.

சில பள்ளிகளில் 98 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சி விகிதம் காணப்படுகிறது. எனவே, சென்னை மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது கல்வித் தரத்தில் சிறப்பாக செயல்பட்டு வருவது பெற்றோர்கள் மத்தியில் சென்னை மாநகராட்சி பள்ளிகள் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை என்பது இருமடங்கு அதிகமாகும்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கான வசதிகள், கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள், மற்றும் ஆசிரியர்கள் தங்களின் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ளுதல் போன்ற பல அம்சங்களால் மாணவர்கள் சேர்க்கை விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மாணவர்களுக்கான தனிப்பட்ட கவனம், திறமைகளை வளர்க்கும் நடவடிக்கைகள், மற்றும் கற்றல் முறைகளில் புதுமைகள் ஆகியவை பள்ளிகளில் கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி பள்ளிகள், எளிய மற்றும் விளிம்பு நிலை மக்களின் கல்விக்கான ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. இப்பள்ளிகள், தனியார் பள்ளிகளை விட குறைந்த செலவில் தரமான கல்வியை வழங்குகின்றன.

சென்னை பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, நகரில் 69 நடுநிலைப் பள்ளிகள், 72 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உட்பட 141 அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு விளையாட்டுத் திறனை மேம்படுத்த மாநகராட்சி ரூ.2.34 கோடியை ஒதுக்கப்பட்டுள்ளது. 141 பள்ளிகளுக்கும் தலா ஒரு தற்காலிக உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் ரூ.15,000, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ.18,000 வழங்கப்பட உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் மாணவர்களின் சேர்க்கை விகிதம் கணிசமான அளவு அதிகரித்து வருகிறது.

கடந்தாண்டு நாங்கள் 6,000 மாணவர்களைச் சேர்த்தோம். தற்போதைய நிலவரப்படி, 13 ஆயிரத்து 800 பேரை சேர்த்துள்ளோம். இது கடந்த ஆண்டை விட இரு மடங்காகும். ஜூன் மாத இறுதிக்குள், இந்த எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டக்கூடும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தனியார் பள்ளிகளை மிஞ்சும் சென்னை மாநகராட்சி பள்ளிகள்: இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இரண்டு மடங்காக உயர்வு appeared first on Dinakaran.

Read Entire Article