
எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடலூர் மாவட்டம், பண்ருட்டி, வடகைலாசம் பகுதியில் 470-க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில், சொந்த பட்டா நிலத்தில் இஸ்லாமிய சமுதாய மக்களின் மார்க்க கல்வி மற்றும் வழிபாட்டுக்காக, அரபி ஆரம்பப் பாடசாலையுடன் கூடிய பள்ளிவாசல் கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மாவட்ட நிர்வாகம் பள்ளிவாசல் கட்டுமானத்திற்கான அனுமதியை தாமதப்படுத்தி, நிர்வாகத்தினரை அலைக்கழிப்பது கண்டனத்திற்குரியது.
பண்ருட்டி வட்டாட்சியர், பள்ளிவாசல் கட்டப்படவுள்ள இடத்தைச் சுற்றி முஸ்லிம் சமூகத்தினர் அதிகம் வசிப்பதாகவும், இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எதுவும் இல்லை எனவும் அறிக்கை அளித்துள்ளார். ஆனால், காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரச்சினை இருப்பதாக கூறி பள்ளிவாசல் கட்டுமானத்திற்கு தடை ஏற்படுத்துவது ஏற்புடையதல்ல. பள்ளிவாசல் கட்டுவதற்கான சட்ட வழிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டு, கட்டுமானத்திற்கு அரசாணை பிறப்பித்து அனுமதியும் அளிக்கப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் தேவையற்ற தாமதம், அரசாணையையும் முதல்வரின் உத்தரவையும் மதிக்காத செயலாக உள்ளது. இது சிறுபான்மை மக்களின் அரசியலமைப்பு உரிமையான வழிபாட்டு உரிமையை பறிப்பதுடன், அவர்களின் மார்க்க கல்வி வளர்ச்சியையும் பாதிக்கிறது. அரசு அனுமதி வழங்கியும் பள்ளிவாசல் கட்டுவதற்கு தடை ஏற்படுத்தும் இத்தகைய மதச்சார்பின்மைக்கு எதிரான செயல்கள், அரசியலமைப்பிற்கு எதிரானவை.
ஆகவே, தமிழக முதல்வர் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, வடகைலாசம் பள்ளிவாசல் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கி, அரசாணையை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். மேலும், தமிழகம் முழுவதும் சொந்த பட்டா நிலங்களில் பள்ளிவாசல் கட்டுவதற்கு ஏற்பட்டுள்ள இது போன்ற தடைகளை நீக்கி, சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க தனிக்கவனம் செலுத்த வேண்டும் என தமிழக முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம். எஸ்டிபிஐ கட்சி, பண்ருட்டி பள்ளிவாசல் உட்பட சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமைக்காக நடைபெறும் அனைத்து அறவழிப் போராட்டங்களுக்கும் முழு ஆதரவு அளிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.