பண்ருட்டி, ஜன. 31: பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 115 வீடுகள் அதிகாரிகள் முன்னிலையில் இடித்து அகற்றப்பட்டது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் ஐந்தரை ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலம் கிராம கணக்கில் ஆதிதிராவிடர் நத்தம் என பட்டா மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த நிலத்தில் அங்குசெட்டிப்பாளையம் கிராம மக்களுக்கு மனைப்பட்டா வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி, மனைப்பட்டா வழங்க ஏதுவாக அந்த இடத்தினை அளந்து மனைப்பிரிவுகளாக உருவாக்கம் செய்து உரிய பயனாளிகளுக்கு மனைப்பட்டா வழங்க உத்தேசிக்கப்பட்டது.
ஆனால் இந்த இடத்தில் 100க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். எனவே ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ள நபர்கள் தாமாக முன்வந்து (29ம் தேதி) மாலை 6 மணிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் கோட்டாட்சியர் அபிநயா, பண்ருட்டி டிஎஸ்பி ராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதையடுத்து பிற்பகல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்திருந்த சுமார் 115 வீடுகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அதிரடியாக அகற்றப்பட்டது. தாசில்தார் ஆனந்த், இன்ஸ்பெக்டர்கள் வேலுமணி, அசோகன், நந்தகுமார், ராஜ தாமரை பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post பண்ருட்டி அருகே ஐந்தரை ஏக்கர் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டிய 115 வீடுகள் இடித்து அகற்றம் appeared first on Dinakaran.