பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

1 week ago 6

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மைசூர் நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்து உள்ளது உலகப் புகழ் பெற்ற பண்ணாரியம்மன் கோவில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 24-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பண்ணாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று திருவீதி உலா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 1-ந் தேதி அம்மன் சப்பரம் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து அதிகாலை நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தினமும் பல்வேறு மலைவாழ் மக்கள் தாரை தப்பட்டை வாத்தியத்துடன் அம்மன் பாரம்பரிய புகழ்பாடி களியாட்டமும் கம்பம் ஆட்டமும் நடைபெற்றது.

நேற்று இரவு குண்டத்திற்கு விறகுகள் அடுக்கும் பணி நடைபெற்றது. பின்னர் இரவு 8 மணிக்கு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அக்னி இடப்பட்டு குண்டம் வளர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு சகல வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அடைக்கலம் உடன் பண்ணாரியம்மன் சருகு மாரியம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் குண்டத்திற்கு இடப்பட்ட நெருப்பினை மூங்கில் கரும்புகளால் தட்டி நெருப்பினை சீராக பரப்பி 15 அடி நீளமும் பத்தடி அகலத்தில் குண்டத்தை தயார் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து குண்டத்தை சுற்றியும் மலர்களை தூவி கற்பூரங்களை ஏற்றி சிறப்பு வழிபாடு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து அதிகாலை 4 மணி அளவில் கோவில் தலைமை பூசாரி குண்டம் இறங்கினார். அதனை தொடர்ந்து அம்மன் படைக்களம் மற்றும் சப்பரம் குண்டத்தில் இறங்கியது. பின் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர்.

இதில் ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், போலீசார் மற்றும் அரசியல் கட்சியினர், சிறுவர், சிறுமிகள் உள்ளிட்ட லட்சக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி பண்ணாரி மாரியம்மனை வழிபட்டனர். பக்தர்கள் குண்டம் இறங்குவதற்காக சாரை சாரையாக வந்தவண்ணம் உள்ளனர். குண்டம் இறங்கும் பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மதியத்திற்கு மேல் சுற்று வட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கால்நடைகளை குண்டத்தில் இறக்கும் நிகழ்வு நடைபெறும்.

குண்டம் இறங்கும்போது கருவறையில் உள்ளே பண்ணாரி அம்மன் வீணை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

குண்டம் திருவிழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தை சுற்றி தயார் நிலையில் தீயணைப்பு துறையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். குண்டத்தில் ஓடி வந்த பக்தர்களை தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

குண்டம் விழாவை தொடர்ந்து நாளை மதியம் மாவிளக்கு பூஜையும் இரவு புஷ்பரத ஊர்வலமும் நடைபெறுகிறது. மேலும் 15-ந் தேதி மஞ்சள் நீராடுதல் மற்றும் பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை மற்றும் தங்க ரத ஊர்வலம் நடைபெறுகிறது. 15-ந் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

Read Entire Article