பணிச்சுமை காரணமா? ஐடி நிறுவனத்தில் ஊழியர் மாரடைப்பால் மரணம்: போலீசார் தீவிர விசாரணை

1 month ago 8

நாக்பூர்: புனேவில் உள்ள பிரபலமான எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தில் கேரளாவைச் சேர்ந்த அன்னா செபஸ்டியன் பேராயில் (26) என்ற இளம்பெண் பணியாற்றி வந்தார். பணியில் சேர்ந்த 4 மாதங்களிலேயே அதிக பணிச்சுமையால் மன அழுத்தத்திற்கு உள்ளான அன்னா செபஸ்டியன், உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த மாதம் பரிதாபமாக உயிரிழந்தார். அதிக பணிச்சுமையால் அன்னா செபஸ்டியன் உயிரிழந்ததாக அவரது தாயார், அந்நிறுவனத்தின் தலைவருக்கு கடிதம் எழுதியதன் மூலம் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தனியார் நிறுவனங்களில் பணிச்சூழலை முறைப்படுத்த வேண்டுமென பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்தது. இச்சம்பவம் குறித்து ஒன்றிய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் மற்றுமொரு பிரபல நிறுவனத்தில் பணிபுரிந்த 40 வயது ஊழியர் மாரடைப்பால் பணியிடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாக்பூரில் உள்ள மிஹான் பகுதியில் எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் சீனியர் அனாலிஸ்டாக பணிபுரிந்து வந்தவர் நிதின் எட்வின் மைக்கேல்(40). இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் அலுவலகத்தில் கழிவறைக்குள் சென்ற போது அங்கேயே திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் உடனடியாக அவரை நாக்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மைக்கேல் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் மைக்கேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், மைக்கேல் மாரடைப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து விபத்து மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மைக்கேலுக்கு மனைவியும், 6 வயதில் மகன் ஒருவரும் இருப்பதாக தெரிவித்த போலீசார், மைக்கேலின் மரணத்திற்கு பணிச்சுமை காரணமா என்ற கோணத்திலும் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். இதனிடையே, மைக்கேலின் மரணம் துரதிர்ஷ்டவசமான சம்பவம் என எச்சிஎல் நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது.

மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு முன் அவருக்கு அலுவலகத்தில் உள்ள கிளினிக்கில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அந்நிறுவன செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். ‘மைக்கேலின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம். ஊழியர்களின் நலனே எங்களுக்கு முதன்மையானது. தங்களது ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நிறுவன வளாகத்தில் உள்ள கிளினிக்கில் வருடாந்திர மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் வழங்கி வருகிறோம்’ என்றும் அவர் தெரிவித்தார்.

 

The post பணிச்சுமை காரணமா? ஐடி நிறுவனத்தில் ஊழியர் மாரடைப்பால் மரணம்: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article