சென்னை, பிப்.6: பணி மாறுதல் வாங்கி கொடுத்த விவகாரத்தில், பணம் கொடுக்கல்- வாங்கல் தகராறில் திருவல்லிக்கேணி போலீஸ் ேராந்து வாகன டிரைவரின் காலை உடைத்த சக காவலர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (39), காவலரான இவர் தற்போது திருவல்லிக்கேணி காவல் நிலைய ரோந்து வாகன டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் ஆயுதப்படையில் பணியாற்றிய போது மதுரை மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்த ஆயுதப்படை காவலர் ஆனந்த் (33), சென்னை புதுப்பேட்டை நாராயணன் நாயக்கன் தெருவை சேர்ந்த ஆயுதப்படை காவலர் சுந்தர்ராஜன் (38), திருண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வள்ளி நகரை சேர்ந்த ஆயுதப்படை காவலர் மணிபாபு (30) ஆகியோர் நண்பர்களாக இருந்துள்ளனர். 3 பேரும் ஆயுதப்படையில் 10 ஆண்டுகள் ஒன்றாக டிரைவர் பணியை செய்து வந்தனர்.
இதற்கிடையே ரங்கநாதன் சக நண்பர்களிடம் சட்டம் ஒழுங்கு -காவல் நியைத்திற்கு பணி மாறுதல் வேண்டி கேட்டுள்ளார். அதற்கு ஆயுதப்படை காவலரான சுந்தர்ராஜன் தான் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பணி பெற்று தருவதாக உறுதி அளித்துள்ளார். அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை ரங்கநாதனிடம் பெற்றுள்ளார். அப்போது ஆனந்த் மற்றும் மணிபாபு ஆகியோர் உடனிருந்துள்ளனர். பின்னர் கடந்த டிசம்பர் மாதம் காவலர் ரங்கநாதன் திருவல்லிக்கேணி சட்டம் -ஒழுங்கு காவல் நிலையத்தில் ரோந்து வாகன டிரைவராக பணிமாறுதல் பெற்றார். அதன் பிறகு சுந்தர்ராஜன், ஆனந்த், மணிபாபு ஆகியோர் பணி மாறுதல் பெற்ற பிறகு கொடுக்க வேண்டிய மீதி பணத்தை நேற்று முன்தினம் மாலை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் வைத்து கேட்டுள்ளார்.
அப்போது ரங்கநாதன், தனக்கு தானாக பணி மாறுதல் வந்ததாகவும், உங்களுக்கு ஏன் பணம் தரவேண்டும் என்றும் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் ரங்கநாதனை சரமாரியாக அடித்துள்ளனர். இதில் அவருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டு எலும்பு முறிந்தது. இதை பார்த்த சக காவலர்கள் ரங்கநாதனை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் சம்பவம் குறித்து காவலர் ரங்கநாதன் அளித்த புகாரின்படி எழும்பூர் போலீசார் ஆயுதப்படை டிரைவர்களான ஆனந்த், சுந்தர்ராஜன், மணிபாபு ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் கொடுக்கல் -வாங்கல் விவகாரத்தில் காவலர் ஒருவரின் காலை சக காவலர்களே உடைத்த சம்பவம் ஆயுதப்படை காவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post பணி மாறுதல் வாங்கி கொடுத்த விவகாரம் போலீஸ் ரோந்து வாகன டிரைவரின் கால் உடைப்பு: சக காவலர்களிடம் உயர் அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.