பணய கைதி விடுவிப்பு, போர்நிறுத்த ஒப்பந்தம்; எகிப்து செயல் திட்டத்திற்கு ஹமாஸ் ஒப்புதல்

1 month ago 10

கெய்ரோ,

காசா முனை பகுதியில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஹமாஸ் அமைப்பினர் ஆட்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து காசாவுக்கு எதிராக இஸ்ரேல் போரில் இறங்கியது. ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசா பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தும், 1 லட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இந்த சூழலில், போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் இஸ்ரேல் கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டனர். இந்த முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1-ந்தேதியுடன் முடிவடைந்தது. 2-வது கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் இருந்த சூழலில், காசா மீது இஸ்ரேல் தாக்குதலை தொடுத்தது. இதனால், பாலஸ்தீனியர்கள் தரப்பில் பலர் பலியானார்கள். இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், எகிப்தின் பணய கைதி விடுவிப்பு மற்றும் போர்நிறுத்த ஒப்பந்தம் ஆகியவற்றுக்கான செயல் திட்டம் ஒன்றை வழங்கியது. இதற்கு ஹமாஸ் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, அமெரிக்க இஸ்ரேலியரான ஈடன் அலெக்சாண்டர் உள்பட 5 பணய கைதிகளை விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் இதற்கு முன்பு, வழங்கிய செயல் திட்டம் போன்றே எகிப்தின் செயல் திட்டம் உள்ளது. எனினும், உயிரிழந்த பணய கைதிகளின் கூடுதல் உடல்களையும் திருப்பி கொடுப்பது பற்றி, இந்த புதிய செயல் திட்டத்தில் என்ன உள்ளது என்ற விவரம் தெரிய வரவில்லை.

இந்த 5 பணய கைதிகளுக்கு ஈடாக, முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்த நிபந்தனைகளின்படி இஸ்ரேல் நடந்து கொள்ள வேண்டும் என ஹமாஸ் அமைப்பு எதிர்பார்க்கிறது. அதனுடன், நிவாரண பொருட்களையும் காசாவுக்குள் அனுமதிக்க வேண்டும் உள்பட 2-ம் கட்ட போர் போர்நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறது.

எகிப்தின் இந்த செயல் திட்டத்திற்கு ஈடாக, இஸ்ரேலும் பதிலுக்கு செயல் திட்டம் ஒன்றை அளித்துள்ளது. இதுபற்றி இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், மத்தியஸ்தர்களிடம் இருந்து செயல் திட்டம் ஒன்று வந்தது. இதனை தொடர்ந்து, பிரதமர் நெதன்யாகு நேற்று தொடர்ச்சியாக ஆலோசனைகளை மேற்கொண்டார்.

அமெரிக்காவுடன் முழு அளவில் ஒருங்கிணைந்த முறையில், சில மணிநேரத்திற்கு முன், இஸ்ரேல் சார்பில் ஒரு புதிய செயல் திட்டம் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய திட்டத்தின்படி, 5 பணய கைதிகள் விடுவிப்புக்கு ஈடாக, காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வழிவகுக்கும் என இஸ்ரேலின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  அதேவேளையில், பணய கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால், காசா பகுதிகளில் இஸ்ரேல் நிரந்தரமாக இருக்கும் என இஸ்ரேலின் பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் கத்ஜ் இந்த வார தொடக்கத்தில் எச்சரித்து இருந்தது கவனிக்கத்தக்கது.

Read Entire Article