திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 2022ல் சிறந்த பட்டு உற்பத்தியாளர் என கலெக்டரிடம் ரூ.25 ஆயிரம் ஊக்க தொகை வாங்கிய விவசாயிதான் பூபதி. வாணியம்பாடி அருகே புத்துக்கோயில் அடுத்த தெக்குப்பட்டு கிராமத்தைச் ேசர்ந்த இவர், அந்தப் பகுதியின் நம்பிக்கைக்குறிய பட்டுப்புழு விவசாயி. 5 வருடங்களுக்கும் மேலாக பட்டுப்புழு உற்பத்தி செய்துவரும் பூபதியின் லாபகரமான விவசாய முறையை தெரிந்துகொள்ள அவரது கிராமத்திற்குச் சென்றோம். எங்களை அவரது மல்பெரி தோட்டத்திற்கு அழைத்துச் சென்றவர் பட்டுப்புழு வளர்க்கும் இடத்தையும் சுற்றிக் காண்பித்து பேசத் தொடங்கினார். எனக்கு விவசாய நிலமெனப் பார்த்தால் 1.5 ஏக்கர் இருக்கிறது. அதில்தான் 20 வருஷமா விவசாயம் செஞ்சிட்டு இருக்கேன். வாழை, காய்கறிகள் என விவசாயம் செய்தபோது விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்கவில்லை. வரவுக்கும் செலவுக்குமே சரியாக இருந்தது. அப்போதுதான் எனது நண்பர் ஒருவர் மல்பெரி செடி வளர்ப்பு பற்றியும் பட்டுப்புழு வளர்ப்பு பற்றியும் சொன்னார். அதற்கு அதிகமான தண்ணீரோ வேலை ஆட்களோ தேவைப்படாது எனச் சொல்லவும் நாமும் பட்டுப்புழு வளர்க்கலாம் என முடிவெடுத்தேன்.
அதற்காக வாணியம்பாடி கோணாமேடு பகுதியில இருக்கிற பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று அங்கு இருந்த அதிகாரிகளிடம் மல்பெரி வளர்ப்பு தகவல்களை கேட்டேன். பின், பட்டுப்புழு வளர்ச்சி பயிற்சி வகுப்பில் கலந்துக்கிட்டேன். பட்டு வளர்ப்புக்கு அரசு மானியம் கிடைக்கும் என அதிகாரிகள் சொல்லவும் இந்த பட்டுப்புழு வளர்ப்பில் நம்பி இறங்கலாம் என முடிவெடுத்தேன்.பட்டுப்புழுக்களுக்கு தேவையான மல்பெரி செடிகளை வளர்ப்பதற்கு நிலத்தை உழுது பின்பு மல்பெரி குச்சியை 2 அடி இடைவெளியில் நட்டேன். ஒரு வரிசைக்கும் அடுத்த வரிசைக்கும் 4 அடி இடைவெளி இருப்பது மாதிரி குச்சிகளை நட்டேன். மல்பெரி செடியை ஒருமுறை நடவு செய்தால் 15 முதல் 20 வருடம் வரை மல்பெரி இலைகள் கிடைக்கும். அதனால செடி வளர்ப்பில் முழு கவனத்தை செலுத்தி செடிகளை நன்கு வளர்த்தேன். மல்பெரித் தோட்டத்தை பார்வையிட்ட பட்டு வளர்ச்சி துறையினர் ஒரு ஏக்கர் மல்பெரிக்கு ரூ10,500 மானியம் கொடுத்தாங்க.
அடுத்து பட்டுப்புழு வளர்ப்புக்காக சிமெண்ட் சீட் ஷெட் கட்டினேன். மேலும் பட்டுப்பூச்சி வளர்ப்புக்காக ரூ50 ஆயிரம் மதிப்புள்ள கட்டர், நெட்ரிக்கா (வலை) எல்லாம் வாங்கி ஷெட் வேலையை முடிச்சேன். இதற்கு ரூ.4 லட்சம் வரை செலவானது. பட்டு வளர்ச்சித் துறை சார்பில் ₹1 லட்சத்து 25 ஆயிரம் மானியம் கொடுத்தாங்க.பொதுவாக பட்டுப்புழுவை இரண்டு முறையில் வளர்த்து வருவாங்க. ஒன்னு முட்டை வாங்கி புழு வளர்ப்பது, அடுத்து இளம்புழு வளர்ப்பவர்களிடம் இருந்து ஒரு வாரம் வளர்ந்த புழுக்களை வாங்கி பயன்படுத்துவது. நான் இளம்புழு வளர்ப்பவர்களிடமிருந்து புழுக்கள் வாங்கினேன். அந்தப் புழுவிற்கு காலை, மாலை என இரண்டு வேளையும் மல்பெரி செடியின் இளம் தளிர் இலைகளை குளிர்ச்சியான நேரத்தில் பறித்து நறுக்கி உணவாக கொடுக்கிறேன். இப்படி நல்ல முறையில் பட்டுப்புழுக்களை பாதுகாத்து வந்தால் ஒரு மாதத்திற்குள் பட்டுப்புழுவில் இருந்து பட்டுக்கூடு கிடைத்துவிடும். இதற்கிடையில் பட்டுப்புழுக்களுக்கு பால் புழு, கரும்புழு, ஊசிப்புழு தாக்குதல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த முறையில் பட்டுப்புழுக்களை வளர்த்து வந்தால் வருடத்திற்கு 10 முறை பட்டுக்கூடுகளை வளர்த்து எடுக்கலாம்.
இந்த முறையில் மாதம் ஒரு முறை 70 முதல் 90 கிலோ வரையிலான வளர்ந்த பட்டுக்கூடுகள் எனக்கு கிடைக்கின்றன. இதனை வாணியம்பாடி, தர்மபுரி, ஓசூர், கோலார் ஆகிய பட்டு வளர்ச்சித் துறை அலுவலக அரசு விற்பனை கூடத்தில் நேரடியாக விற்பனை செய்கிறேன். பட்டுக்கூடுகளில் உள்ள பட்டின் தரத்திற்கு ஏற்றவாறு, பட்டு நூலின் விலைக்கேற்ப அன்றைய நாளில் பட்டுக்கூட்டின் விலை நிர்ணயம் செய்து அதிகாரிகள் கிலோவிற்கு ₹250 முதல் ₹600 வரை கொடுக்கிறார்கள். இதன் மூலம் எனக்கு மாதம் ₹40 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது. இதில் செலவு ரூ.20000 போக லாபமாக ரூ.20000 கிடைக்கிறது. பட்டுக்கு கூடுதல் விலை கிடைத்தால் லாபமும் அதிகமாக கிடைக்கும். நல்ல முறையில் பட்டுப்புழுக்களை வளர்த்து பட்டுக்கூடு தரமாக இருந்தால் வருஷத்திற்கு ₹2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை லாபம் சம்பாதிக்கலாம்.
தொடர்புக்கு:
பூபதி – 99439 24647
பட்டுப்புழு வளர்க்கப்படும் கூடாரத்தில் வெப்பமானது மிதமாக இருக்க வேண்டும் என்கிறார் பூபதி. அதாவது புழு வளர்ப்பின் போது வெளிச்சமும் இருளும் மிதமாக இருக்க வேண்டும். அதே சமயம் கூடாரத்திற்குள் காற்றோட்டம் இருப்பது மாதிரியும் பார்த்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாத காற்றை வெளியேற்ற எக்சாஸ்டர் பேன் அமைக்கலாம். புழு வளர்ப்பதற்கு 5 நாட்கள் முன்பு இளம்புழு வளர்ப்பு அறையை நீர் கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும். அறையை சுற்றிலும் பிளிச்சிங் பவுடர் தூவ வேண்டும் என பட்டுப்புழு வளர்ப்பதற்கு தேவையான யோசனைகளை கூறுகிறார் பூபதி.
The post பணம் தரும் பட்டுப்புழு வளர்ப்பு…! appeared first on Dinakaran.