பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல, அதை சமூகத்திற்கு பயனுள்ளதாக மாற்றியவர் ரத்தன் டாடா: புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் புகழாரம்

3 months ago 15

சென்னை: புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: இந்தியாவின் வளர்ச்சியில் தொழில்துறையின் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர் ரத்தன் டாடா. வறுமையில் வாழ்ந்தாலும்; இளமைக்காலம் தொட்டு கல்வியின் மீது கொண்ட பற்றால் படித்து சமூகம் வாழ்வதற்கு தேவையான நவீன யுக்திகளை சுதந்திர காலத்திற்கு முன்பே விதைத்தவர். எண்ணிலடங்கா இளைஞர்களின் கனவுகளை நனைவாக்கிய பிதாமகன். உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்பதற்கு இவரது பங்களிப்பு எந்நாளும் மறவாதது.

தன் குடும்பம், தன் பிள்ளை, தன் பெண்டு என்று இல்லாமல் அனைவரும் உயர்ந்தால்தான் சமூகமும், நாடும் உயரும் என்பதை கணித்த தீர்க்கதரிசி! அவரது இழப்பு இந்திய நாட்டிற்கு மட்டுமல்ல, உலகம் தழுவிய தொழில்துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. இந்திய பொருளாதாரத்தின் மிகப்பெரிய ஆணிவேரை, ஆல மரத்தை, பெரும்தூணை, பெரும் நம்பிக்கையை இழந்திருக்கிறோம். பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல, அதை சமூகத்திற்கு பயனுள்ளதாக மாற்றுவதில் அவருக்கு நிகர் இனி யாரும் பிறக்க வாய்ப்பில்லை.

அன்பு, அமைதி, அடக்கம், பணிவு, தொலைநோக்கு பார்வை என விசால பார்வையால் உலகம் முழுக்க இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தவர். இந்த நேரத்தில் டாடா குழுமத்தின் லட்சக்கணக்கான தொழிலாளர்கள், அவரது அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். தேசம் என்ற கட்டுமானத்தில் அஸ்திவாரத்தை இழந்துநிற்கிறோம். மறைந்தாலும் அவர் விதைத்த விதைகள் ஒருநாளும் உறங்குவதில்லை; விதைகள் விருட்சமாகட்டும் என்ற நம்பிக்கையோடு பயணிப்போம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல, அதை சமூகத்திற்கு பயனுள்ளதாக மாற்றியவர் ரத்தன் டாடா: புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் புகழாரம் appeared first on Dinakaran.

Read Entire Article