சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிராம மக்களின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்துவதற்காக சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையினர் இயக்குனரை சந்திப்பதற்காக வந்த நாகை மாவட்டம் பிரதாபராமபுரம் ஊராட்சி தலைவர் சிவராசு, கடலூர் மாவட்டம் சி.முட்லூர் ஊராட்சித் தலைவர் வேத நாயகி, திருச்சி மாவட்டம் கிருஷ்ணாபுரம் ஊராட்சி தலைவர் ரம்யா, கோவை மாவட்டம் கெம்மரம்பாளையம் ஊராட்சி தலைவர் செல்வி நிர்மலா ஆகியோர் நாள் முழுவதும் காத்திருந்த போதிலும், இயக்குனரை சந்திக்காமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பட்டியலின ஊராட்சி தலைவர்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியும், அவமதிப்பும் கண்டிக்கத்தக்கவை.
பட்டியலினத்தைச் சேர்ந்த இந்த ஊராட்சி தலைவர்கள் தங்களின் கிராமங்களில் பட்டியலின மக்களுக்கு வீட்டு மனை பட்டா, சாலை வசதி, எரிமேடை , சமுதாயக் கூடம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பல நிலைகளில், பல முறை மனு அளித்தும் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனரை நேரில் சந்தித்து முறையிட்டாலாவது தங்களின் கோரிக்கைகளுக்கு விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கையும் பல நூறு கிலோ மீட்டர் தொலைவு பயணித்து சென்னைக்கு வந்த அவர்களை ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் சந்தித்திருக்க வேண்டும்.
ஆனால், காலை முதல் மாலை வரை காத்திருந்தும் கூட, இயக்குனரை சந்திக்க முடியாது என்று கூறி இயக்குனரின் நேர்முக உதவியாளரும், அலுவலக உதவியாளரும் தங்களை விரட்டியடித்ததாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பட்டியலினத்தைச் சேர்ந்த உள்ளாட்சி தலைவர்களுக்கு உள்ளூர் அளவில் உரிய மரியாதையும், அதிகாரமும் வழங்கப்படுவதில்லை என்பது தான் பெரும் குற்றச்சாட்டாக எழுந்திருக்கிறது. இத்தகையை சூழலில் பட்டியலினத்தைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அதிகாரத்தை செயல்படுத்துவதற்கு அதிகாரிகள் தான் துணையாக இருக்க வேண்டும். ஆனால், அவர்களே பட்டியலின ஊராட்சி தலைவர்களால் சந்திக்க முடியாத உயரத்தில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டால் பட்டியலின உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும், மக்களுக்கும் எவ்வாறு சமூகநீதி கிடைக்கும்?
பட்டியலின ஊராட்சி தலைவர்களை ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் சந்திக்க மறுத்தது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்கள், மக்களின் நலன் சார்ந்து முன்வைக்கும் கோரிக்கைகளை விரைவாக ஆய்வு செய்து நிறைவேற்ற சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.