பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

3 months ago 14

சென்னை: சென்னையில் மீன் மார்க்கெட் என்றாலே நம் அனைவரது நினைவில் வருவது காசிமேடு, பட்டினப்பாக்கம் மீன்அங்காடிகள்தான். ஞாயிற்றுக்கிழமைகளில் காசிமேடு, பட்டினப்பாக்கம் மீன் அங்காடிகளில் அசைவ பிரியர்களின் கூட்டம் அலைமோதும். பட்டினப்பாக்கம் மீன் மார்க்கெட்டை பொறுத்தவரை லூப் சாலையில் இருமுறமும் மீனவர்கள் மீன் கடைகள் அமைத்து மும்முரமாக மீன் வியாபாரம் செய்து வருகின்றனர்.

காமராஜர் சாலையிலிருந்து சீனிவாசபுரம் பகுதிக்கு செல்பவர்களுக்கும், சீனிவாசபுரம் பகுதியிலிருந்து காமராஜர் சாலையை அடைய நினைப்பவர்களுக்கும் லூப் சாலை மிக முக்கியமான சாலையாக உள்ளது. பரபரப்பு நிறைந்த இந்த லூப் சாலையை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமைச் செயலகத்தில் இருந்து வரும் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் என பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களில் அசைவ பிரியர்கள் லூப் சாலையில் உள்ள மீன் அங்காடிக்கு படையெடுப்பதாலும், அவர்கள் வாகனங்களை சாலையிலேயே விட்டுவிடுவதாலும், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.

எனவே, பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் அங்காடியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதேநேரத்தில் மீன் கடைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் வாகனங்களால் லூப் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக கருதிய சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது. அந்த பகுதியில் ஆக்கிரமிப்பு மீன் கடைகளை உடனே அகற்ற மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2022ம் ஆண்டு சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டியுள்ள லூப் சாலையில் ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் நவீன மீன் அங்காடி அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. இதைதொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பில் பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டியுள்ள லூப் சாலையில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மீன் அங்காடி அமைக்க அரசின் நிர்வாக அனுமதி கோரி விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நிர்வாக அனுமதியும், உள்கட்டமைப்பு வசதிகள் நிதியின் கீழ் ரூ.9 கோடியே 97 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று முடிந்தன. இந்த நவீன மீன்அங்காடியின் மேற்பரப்பு முழுவதும் டென்சில் ரூபிங் செய்யப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சுவருடன் 366 மீன் அங்காடிகள், மீன்களைச் சுத்தம் செய்வதற்கும், மீன்களை வெட்டுவதற்கான வசதிகள், மீன் அங்காடி வளாகத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யப்பட்ட பிறகே வெளியேற்றும் வகையில் 40 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, 60 இருசக்கர வாகனங்கள், 110 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்த வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளும், உயர் கோபுர மின் விளக்குகள் என நவீன மீன் அங்காடியாக இந்த லூப் சாலை மீன் அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மீன் அங்காடி செயல்பட தொடங்கியதும் பெருமளவில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த மீன் அங்காடி அமைக்கும் கட்டுமான பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 12ம்தேதி மீன் அங்காடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஆனால், மீனவர்களுக்கு கடை ஒதுக்கீடு செய்யும் பணி இன்னும் முடிவடையாததால் இந்த நவீன மீன் அங்காடி செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் நூற்றுக்கணக்கான மீன் வியாபாரிகள் திணறி வருகின்றனர். எந்தெந்த மீனவர்களுக்கு கடை ஒதுக்க வேண்டும் என மீனவர்கள் சங்கம் சார்பில் கணக்கெடுக்கப்பட்டு, சென்னை மாநகராட்சியிடம் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இதனை சரிபார்க்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.

அதாவது, இதுவரை 360 விற்பனையாளர்களில் 240 பேருக்கு லாட்டரி முறை மூலம் ஸ்டால்கள் ஒதுக்கப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. சுமார் 28 விற்பனையாளர்கள் வணிகத்திலிருந்து வெளியேறியுள்ளனர். மீதமுள்ள கடை ஒதுக்கீடுகளை இறுதி செய்வது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கடை ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்டுள்ள இந்த காலதாமதத்தால் லூப் சாலை நடைபாதை மற்றும் கடற்கரை ஓரங்களில் மீண்டும் கடைகளை அமைக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்ந்தால் அவற்றை அகற்றுவதில் மீண்டும் சிக்கல் ஏற்படும் என்பதால் கடை ஒதுக்கீடு செய்யும் பணிகளை வேகப்படுத்தி நவீன மீன் அங்காடியை முழு அளவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

* சாலையை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை
பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையில் பல கோடி மதிப்பில் இந்த நவீன மீன் அங்காடி கட்டப்பட்டுள்ளது. மீன் விற்பனையாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இதில் உள்ளன. முதல்வர் இந்த மீன் அங்காடியை திறந்து வைத்த நிலையில், விற்பனையாளர்களுக்கு கடை ஒதுக்கீடு செய்யும் இன்னும் முடிவடையாததால் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

இந்த பணிகள் இந்த வார இறுதிக்குள் முடிவடைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ள நிலையில், இந்த மீன் அங்காடி திறந்த பிறகும் சாலையை ஆக்கிரமிப்பு செய்து மீன் கடைகளை திறந்தால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்துவதோடு, கடை போடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன் எச்சரித்துள்ளார்.

* இந்த வார இறுதியில் கடைகள் ஒதுக்கப்படும்
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘பட்டினப்பாக்கம் லூப் சாலையில் அமைக்கப்பட்டுள்ள நவீன மீன் அங்காடியில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதல்வர் திறந்து வைத்த இந்த மீன் அங்காடியை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர். கடந்த 1ம் தேதி நிலவரப்படி 360 விற்பனையாளர்களில் 240 விற்பனையாளர்களுக்கு மட்டுமே லாட்டரி முறை மூலம் ஸ்டால்கள் ஒதுக்கப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

28 விற்பனையாளர்கள் வணிகத்தை விட்டு வெளியேறினர். ஆனால் மீதமுள்ள விற்பனையாளர்களுக்கு இன்னும் ஸ்டால்களை ஒதுக்கவில்லை. அவர்கள் தங்கள் பெயர்கள் மற்றும் ஸ்டால் எண்களுடன் அதிகாரப்பூர்வ கடிதங்களைக் கோரியுள்ளனர், அவை விரைவில் வழங்கப்படும். ஆடித் திருவிழாக்கள் காரணமாக கடை ஒதுக்கீட்டை பெறுவதற்காக விற்பனையாளர்கள் தேதி நீட்டிப்பு கோரினர். இதனால் விற்பனையாளர்களுக்கான கடை ஒதுக்கீட்டை இந்த வார இறுதிக்குள் முடித்து விரைவில் நவீன மீன் அங்காடியை செயல்பாட்டுக்கு கொண்டு வருவோம்,’’ என்றனர்.

The post பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article