
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடற்கரை பகுதியில் முள்ளிக்குப்பம் முதல் நொச்சிக்குப்பம் வரை வாழ்கின்ற மீனவ மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் சார்பாக புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புகளை உரியவர்களிடம் வழங்காமல் தி.மு.க. அரசு கால தாமதம் செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது. மீனவச் சொந்தங்கள் காலங்காலமாக வாழ்ந்த பூர்வீக இடங்களை பறித்துவிட்டு, மாற்று குடியிருப்புகளை வழங்க தி.மு.க. அரசு மறுப்பது கொடுங்கோன்மையாகும்.
பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக்காலத்தில் பட்டினப்பாக்கம் பகுதியில் மீனவ மக்கள் வாழ்ந்த குடிசைப்பகுதியில், அடிக்கடி தீ விபத்து நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்ட காரணத்தால், அங்கு வாழ்ந்த 250 குடும்பங்களுக்கு முள்ளிக்குப்பம் சீனிவாசபுரம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் மாற்றுக் குடியிருப்புகள் வழங்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளாக மீனவ மக்கள் வாழ்ந்து வரும் அக்குடியிருப்புகள் தற்போது முற்றிலும் பழுதடைந்து இடிந்துவிழும் நிலையில் வாழத்தகுதியற்ற பகுதியாகிவிட்டது.
இந்நிலையில் மீனவ மக்களுக்கென்று கட்டப்பட்ட புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் அம்மக்களிடம் ஒப்படைக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். அதோடு, அரசு ஒதுக்கிய குடியிருப்பில் கடந்த இரண்டு தலைமுறையாக வாழ்ந்து வரும் மீனவ மக்களின் வாரிசுகளின் குடும்பங்களுக்கு தனிக் குடியிருப்பு வழங்கவும் தி.மு.க. அரசு மறுக்கின்றது. அதுமட்டுமின்றி, ஆளும் தி.மு.க. கட்சி பொறுப்பாளர்கள் மீனவர் வீடுகளை முறைகேடாக விற்கவும் முயல்கின்றனர். இவை குறித்து, மீனவ மக்கள் அரசிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் மிகுந்த ஏமாற்றத்திற்கும், பெரும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, மாற்று குடியிருப்புகள் வழங்குவதாகக் கூறி பட்டினப்பாக்கம் பகுதியில் தொல்குடி தமிழ் மக்கள் வாழ்ந்த பூர்வீக வாழ்விடங்களை பறித்த தமிழ்நாடு அரசு, தங்களிடம் அதனை திருப்பி ஒப்படைக்குமாறும் மீனவ மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடற்பரப்பிலிருந்து 500மீ தூரம் வரை மீனவ மக்கள் குடியிருப்புகள் அமைக்கவே முன்னுரிமை வழங்க வேண்டுமென்று தென்மண்டல பசுமைத்தீர்ப்பாயம் கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே, சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் மீனவ மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பூர்வீக வாழ்விடங்களை தமிழ்நாடு அரசு அம்மக்களிடம் மீள ஒப்படைக்க வேண்டுமெனவும், அதுவரை மீனவ மக்களுக்காகக் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளில் அவர்களை குடியமர்த்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.