புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் நேற்று (ஜன.31) துவங்கியது. அப்போது மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இந்நிலையில், இன்று (பிப்.,01) முற்பகல்11 மணிக்கு நாடாளுமன்றத்தில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
மத்தியில் பாஜக தலைமையிலான அரசின் ஆட்சியில் 3வது முறையாக தாக்கல் செய்யப்பட்ட முழு பட்ஜெட் இதுவாகும். தொடர்ந்து 8வது முறையாக நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
தனது பட்ஜெட் உரைகளில் கவிஞர்கள், தத்துவவாதிகள், செவ்வியல் இலக்கியங்களில் இருந்து மேற்கோள்களைக் காட்டுவதை தனித்துவமான வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிதியாண்டு (2025-26) பட்ஜெட்டும் அதற்கு விதிவிலக்கு இல்லை. மத்திய நிதிமந்திரி தாக்கல் செய்த பட்ஜெட் உரையில், தனது நேரடி வரி விதிப்புகள் பற்றிக் குறிப்பிடும்போது திருக்குறளை மேற்கோள் காட்டினார். ஆட்சியாளர்களிடமிருந்து மக்கள் நல்லாட்சியை எதிர்பார்க்கிறார்கள் என்பதனை வலியுறுத்த, திருக்குறளின் சொங்கோன்மை என்னும் அதிகாரத்திலிருந்து 542-வது குறளை மேற்கோள்காட்டினார். வள்ளுவரின் வாய்மொழியில்,
வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி - என்று குறிப்பிட்டார்.
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் தாம் வாழ்வதற்கு வான்மழையை எதிர்பார்த்து காத்திருப்பது போல, நாட்டின் மக்கள் மன்னனின் நல்லாட்சியை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்பது இதன் பொருள் ஆகும்.
திருக்குறளைப் போலவே இந்த முறை தனது மத்திய பட்ஜெட்டில் தெலுங்கு கவிஞர் குருஜாதா அப்பாராவின் மேற்கோளையும் சுட்டிக்காட்டியுள்ளார். 2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான அரசாங்கத்தின் திட்டத்தினைப் பற்றி பேசும்போது தெலுங்கு கவிஞர் குருஜாதா அப்பாராவின் மேற்கோள் ஒன்றினைக் குறிப்பிட்டார். அவர் கூறுகையில், தேசம் என்பது மண் அல்ல; தேசம் என்பது மக்களால் ஆனது என்று குருஜாதா அபாராவ் கூறி இருக்கிறார்.
இதைக் கருத்தில் கொண்டு வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. வறுமை ஒழிப்பு, நல்ல பள்ளிக் கல்வி, தரமான எளிதாக அணுகக்கூடிய சுகாதாரம், திறன் மேம்பாட்டுடன் கூடிய வேலை வாய்ப்புகள், பொருளாதார செயல்பாடுகள், நமது நாட்டை உலகின் உணவுக் களஞ்சியமாக மாற்றுவதற்கான வழிகள் ஆகியவற்றை அடைய 10 துறைகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.