சென்னை,
கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில்;-
மூன்றாவது முறை பாஜக ஆட்சி அமைத்த பிறகு தாக்கல் செய்யப்படுகிற முழு நிதிநிலை அறிக்கை. சிறு குறு தொழில்களையும், விவசாயத்தையும் காப்பாற்றும் என்ற எண்ணத்தில் மண்ணை போட்ட நிதிநிலை அறிக்கையாக ஒன்றிய நிதி அமைச்சர் தாக்கல் செய்திருக்கிறார். தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டது என்ற முகத்திரையின் பின்னால் பட்ஜெட்டின் வளர்ச்சிக்கு உதவாத அறிவிப்புகள் மறைந்திருக்கின்றன. வருடம் 12 லட்சம் சம்பளம் வாங்கும் தனிநபருக்கு சலுகை என்ற விதத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மிக குறைந்த அளவே இந்த அளவிற்கு சம்பளம் வாங்குபவர்கள் நாட்டில் இருப்பார்கள். வருடம் 12 லட்சம் சம்பளம் வாங்கும் தனி நபர்களுக்கு சலுகை என்ற அறிவிப்பை அந்தப் பயனாளிகள் சார்பாக வரவேற்கின்றேன். விவசாய உற்பத்தி பொருட்களும் குறைந்தபட்ச விலையில் கிடைக்குமென்று எதிர்பார்த்த விவசாயிகள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.
நீர் பாசன திட்டங்களுக்காக குறிப்பாக நதிநீர் இணைப்பிற்காக அறிவிப்பு இல்லாததும் ஏமாற்றம் அளிக்கிறது. தொடர்ந்து விவசாயிகளுக்கு கடன் கொடுக்கப்படுமென்ற அறிவிப்பு இருக்கும் பொழுது கடனை திருப்பி கட்டுவதற்காக லாபம் ஈட்டும் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. சில லட்சங்கள் வருட வருமானம் ஈட்டுகின்ற தொழிற்சாலைகளும் வருடத்திற்கு 500 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகின்ற தொழிற்சாலைகளும் ஒரே கோட்டில் வைக்கப்பட்டு பார்க்கப்பட்டிருப்பது வளர்ச்சிக்கு உகந்ததல்ல. வருடத்திற்கு சில லட்சங்கள் முதல் ஐந்து கோடி வரை வருட வருமானம் ஈட்டுகின்ற தொழிற்சாலைகள் சிறு தொழில்கள் என்று வகைப்படுத்தப்பட்டு தனி சலுகைகள் அறிவிக்கப்படுமென்ற எதிர்பார்ப்பும் பொய்த்து போனது.
நஷ்டத்தில் இருக்கின்ற தொழில்களை காப்பாற்றுவதற்கு எந்த அறிவிப்பும் இல்லாதது வருத்தமளிக்கிறது. உலக சூழ்நிலைகளின் காரணமாக லாபம் குறைவாக ஈட்டுகின்ற தொழில்களுக்கு வட்டி சலுகை அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் ஏமாற்றப்பட்டு விட்டது. கேன்சர் மையங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு நாட்டின் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த கேன்சரை உருவாக்குகின்ற தொழிற்சாலை மற்றும் நகரப் பகுதி கழிவுகள் கலக்கின்ற நீர் நிலைகளை மேம்படுத்த அறிவிப்புகள் இல்லை. கேன்சர் வராமல் தடுப்பதற்கான முயற்சிகளும் இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கு உகந்த நிதிநிலை அறிக்கையாக இந்த நிதிநிலை அறிக்கை இல்லை. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.