படைகள் வாபஸ் சூழலில்... கிழக்கு லடாக்கில் தீபாவளி இனிப்புகளை பகிர்ந்து கொண்ட இந்திய-சீன ராணுவ வீரர்கள்

2 months ago 12

லடாக்,

தீபாவளி பண்டிகை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இருளை, ஒளி வெற்றி கொண்ட மற்றும் தீமையை நன்மை வெற்றி பெற்றதற்கான அடையாளமாக தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில், கடவுள் மகாலட்சுமியிடம் செல்வ வளம் வேண்டி வழிபாடு செய்வதுடன், சுவையான இனிப்புகளை பகிர்ந்து கொள்வது மற்றும் பரிசுகளை பரிமாறி கொள்வது ஆகியவை கொண்டாட்டங்களில் இடம் பெறும்.

இதேபோன்று, பட்டாசுகளை வெடித்து மகிழ்வதும் வழக்கம். வீடுகளில் வண்ணமயத்திலான ரங்கோலி கோலங்களை வரைந்தும், விளக்குகளை ஏற்றியும் குடும்பத்தினர் மகிழ்வார்கள்.

 

நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி வரும் சூழலில், எல்லை பகுதியில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், கிழக்கு லடாக்கில் சுசுல்-மோல்டோ எல்லையில் காவல் பணியில் ஈடுபட்டு வரும் இந்திய ராணுவத்தினர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சீன வீரர்களுடன் இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர்.

இரண்டு ராணுவங்களும் கிழக்கு லடாக்கின் அசல் எல்லை கோட்டு பகுதியில் இருந்து, தங்களுடைய படைகளை விலக்கி கொள்வது என முடிவு செய்து அதற்கான பணிகள் சமீபத்தில், நடந்து வரும் சூழலில் இனிப்பு பரிமாற்றங்கள் நடந்துள்ளன.

இதற்கு முன் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று கூறும்போது, கிழக்கு லடாக்கின் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து, தங்களுடைய படைகளை வாபஸ் பெறும் பணி ஏறக்குறைய முழுமையடைந்து விட்டது என கூறியுள்ளார்.

அசாமின் தேஜ்பூர் நகரில் பாப் காதிங் மியூசியத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய மந்திரி சிங், அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியின் சில இடங்களில், மோதல்களை தீர்ப்பதற்காக தூதரக மற்றும் ராணுவம் என இரு மட்டங்களிலும் இந்தியா மற்றும் சீனா இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்று கூறினார். சமீபத்திய இந்த பேச்சுவார்த்தைகளால், படைகளின் வாபஸ் ஏறக்குறைய முழுமையடைந்து விட்டது என்று கூறினார்.

இதேபோன்று, இந்தியாவுக்கான சீன தூதர் சூ பெய்ஹாங் நேற்று கூறும்போது, இந்தியா, சீனா இடையே அண்டை நாடுகளாக வேற்றுமைகள் இருந்தபோதிலும், இந்த வேற்றுமைகளை எப்படி கையாண்டு, தீர்க்கிறோம் என்பது முக்கியம் வாய்ந்தது என்று கூறினார். இந்த சூழலில், எல்லை பகுதியில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்களுக்குள் இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர்.

Read Entire Article