கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே உள்ள படேதலாவ் ஏரியில் இருந்து, காட்டாகரம் ஏரி வரை உபரிநீர் செல்லும் கால்வாய் புதர் மண்டி வறண்டுள்ளது.
எனவே, கோடையை பயன்படுத்தி, கடைமடை வரை தண்ணீர் செல்லும் வகையில், இந்த கால்வாயை தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளி பஞ்சாயத்தில், 269 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி எனப்படும் படேதலாவ் ஏரி அமைந்துள்ளது.
இந்த ஏரிக்கு மார்க்கண்டேய நதியில் இருந்து, கால்வாய் மூலம் நீர்வரத்து உள்ளது. படேதலாவ் ஏரியால் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் உள்ள காட்டிநாயனப்பள்ளி, அகசிப்பள்ளி, போகனப்பள்ளி, கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகள் பயன்பெறுகிறது.
இந்நிலையில், படேதலாவ் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், பர்கூர் ஒன்றியத்தில் உள்ள 9 ஏரிகளுக்கு கொண்டு செல்லும் வகையில், கடந்த 19 ஆண்டுகளுக்கு முன், படேதலாவ் ஏரி கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் படேதலாவ் ஏரியில் இருந்து, வெண்ணம்பள்ளி ஏரி, ஒரப்பம் ஏரி, பாலிநாயனப்பள்ளி ஏரி, ஜெகதேவி ஏரி, மோடி குப்பம் ஏரி, ஐகொந்தம் கொத்தூர் ஏரி வழியாக, காட்டாகரம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில், கால்வாய் அமைக்கப்பட்டது.
ஆனால், இதுநாள் வரை இந்த கால்வாய் வழியாக, 2 முறை மட்டுமே கடைமடை அருகே தண்ணீர் சென்றுள்ளது. கால்வாய் செல்லும் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் காரணமாக, புதர்கள் மண்டி காட்சியளிக்கிறது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘கிருஷ்ணகிரி, பர்கூர் ஒன்றியங்களில் உள்ள ஏரிகள் பயனடையும் வகையில் கொண்டு வரப்பட்ட படேதலாவ் ஏரி கால்வாய் திட்டம், முறையாக பராமரிக்கப்படவில்லை. பல இடங்களில் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
சில இடங்களில் மண் சரிந்தும், புதர் மண்டியும் ஏரியின் தடமே தெரியாமல் உள்ளது. வரும் காலங்களில் படேதலாவ் ஏரி முழுவதும் நீர் நிரம்பினாலும், உபரிநீர் செல்லும் கால்வாய் வழியாக மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் போகாது.
எனவே, தற்போது படேதலாவ் ஏரி முதல், காட்டாகரம் ஏரி வரை செல்லும் கால்வாயை சீரமைக்க வேண்டும். கோடையை பயன்படுத்தி, தற்போதே இப்பணிகளை துவங்கினால் தான், மழைக்காலம் வரும்போது தண்ணீரை முறையாக முழுமையாக சேமிக்க முடியும். மேலும், உபரிநீர் தடையின்றி கடைமடை ஏரிக்கு செல்லும்,’ என்றனர்.
The post படேதலாவ் முதல் காட்டாகரம் ஏரி வரை புதர் மண்டி கிடக்கும் கால்வாயை சீரமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.