கும்ப ராசியில் ராகு கொடுப்பாரா?

1 week ago 6

நமது சூரிய மண்டலத்தில், சூரியனுக்குச் சற்று மேலே “ராகு” எனும் சக்திவாய்ந்த, ஈர்ப்பு சக்தியும், நேர் கீழே மற்றொரு ஈர்ப்பு சக்தியும் உள்ளதை ேமலை நாடுகளின் வானியல் நிபுணர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்! மேலே உள்ள காந்த – ஈர்ப்பு சக்தியை (Magnetic power) ராகு எனவும், நேர் கீழேயுள்ள ஈர்ப்பு சக்தியை கேது எனவும் அந்நாடுகளின் வானியல் நூல்கள் விவரித்துள்ளன. ரோமானிய சாம்ராஜ்யம், அதன் உன்னத நிலையில் சிறப்புடன் திகழ்ந்தபோது, வானியல் கலையில் பிரசித்திப் பெற்று விளங்கியது. நாம், “குரு” எனப் பூஜிக்கும் கிரகத்தை ரோமானியர்கள், “ஜூபிடர்” -எனப் பூஜித்து வந்தனர். இந்த கிரகத்திற்காக பல கோயில்களை நிர்மாணித்துப் பூஜித்து வந்ததையும் ரோமானிய சரித்திரம் விவரித்துள்ளது.

ரோமானியர்கள் மட்டுமல்லாமல், கிரேக்க, எகிப்து, பாரசீக நாடுகளும் கிரகங்களுக்காக பல வழிபாட்டுத் தலங்களை நிர்மாணித்தும், பூஜித்தும் வந்ததை அந்நாடுகளின் சரித்திரங்கள் சான்று கூறுகின்றன.

கிரேக்க – ரோமானிய வானியல் நூல்களில், “நிழல் கிரகங்கள்” (shadow planets) என விவரிக்கப்பட்டுள்ள ராகு – கேதுவின் காலங்களில் பல விபரீத சரித்திர நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளதையும், சரித்திரம் கூறுகிறது.

உதாரணத்திற்கு, உலகப் பிரசித்திப் பெற்ற தத்துவ ஞானியான, சாக்ரடீஸ் எனும் கிரேக்க தீர்க்க தரிசி, அவரது பகைவர்களால் விஷம் அருந்தச் ெசய்து, மிகக் கொடூரமாகக் கொன்றபோது, நிழல் கிரகங்களில் ஒன்றான ராகு, அதிக பலத்துடன் சஞ்சரித்ததாக பண்டைய கிரேக்க – வானியல் நூல்கள் விவரித்துள்ளன.

இதே போன்று, பாரசீக (தற்போதைய ஈரான்) மற்றும் எகிப்து, பாலஸ்தீனம் ஆகிய நாடுகளிலும் மக்களிடையே நிலவி வந்த, ராகு – கேது பற்றிய தீவிர நம்பிக்கை பற்றியும், சரித்திரம் விளக்கியுள்ளது.

வானியல் கலையிலும், ஜோதிடத்திலும், கிரேக்க – எகிப்திய, பாலஸ்தீன, சீன மற்றும் இந்திய நாடுகள் உலகப் புகழ்வாய்ந்து விளங்கின. பாரதத்தின் புகழ்பெற்ற நாளந்தா மற்றும் தட்ச சீலம் ஆகிய பல்கலைக் கழகங்களில் உலக நாடுகளின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் வந்து, வானியல் மற்றும் ஜோதிடப் பாடங்களைக் கற்று வந்ததை, இந்திய சரித்திரம் விளக்கியுள்ளது (ஆதாரம் : “The struggle for the Hindu empire” – by Prof. Dr. Jadunath Sircar – Vol. II and III).

இவற்றிலிருந்து, மக்களின் அன்றாட வாழ்க்கையில், எந்த அளவிற்கு, ராகு – கேது ஆகிய இரண்டு நிழல் கிரகங்களின் மீதும் மக்கள் நம்பிக்கையும், அச்சமும் கொண்டிருந்தனர் என்பது, தெரிகின்றது!

குறிப்பாக, “ராகு” என்றாலே, “குரூர” கிரகம் என மக்கள் நம்பினர். ஜனன கால ஜாதகத்தில், ராகு அனுகூலமாக இல்லாவிடில், அவரது தசா, புக்திக் காலத்தில், தாங்குவதற்கு இயலாத, கொடிய துன்பங்களை விளைவிப்பார் என மக்கள் மனதில் ஆழ்ந்து பதிந்துவிட்டது!! அதே போன்று, “மோட்சகாரகர்” எனப்படும் கேதுவின் தசா, புக்திகளின் காலத்தில், சம்பந்தப்பட்ட நபருக்கு, உலக வாழ்க்கையின் பற்றுதல்கள் விலகி, மனதில் வைராக்கியமும், விரக்தியும் ஏற்படும் என்றும் நம்பினர்!

இவற்றிலிருந்து, எந்த அளவிற்கு மானிட வாழ்க்கையில் ராகுவும் – கேதுவும் தொடர்புள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ரோமானிய சாம்ராஜியம், அதன் உன்னத நிலையில், விளங்கியபோது, துருக்கி நாட்டுடன், அடிக்கடி மிகக் கொடிய போர்கள் நிகழ்ந்து வந்ததற்கும், ராகு – கேதுக்களின் சஞ்சார நிலைகளே காரணமாகும் என அப்போதைய மக்கள் நம்பி வந்ததை, ரோமானியச் சரித்திரம் விவரிக்கின்றது.

ஐரோப்பிய நாடுகளிடையே, மிகக் குறுகிய காலத்தில், பல போர்களும், உள்-நாட்டுக் கலவரங்களும், பெரிய அளவில் உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுவந்ததற்கு, ராகு – ேகது ஆகிய இரு நிழல் கிரகங்களின் சஞ்சார நிலைகள் காரணமென்று பண்டைய சரித்திர நூல்கள் விவரித்துள்ளன. அந்த அளவிற்கு, அசுர கிரகங்களான ராகு – கேது கிரகங்களின் சஞ்சார நிலைகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருந்து வந்துள்ளது.

முதலாம் உலக யுத்தத்திற்கும், இரண்டாம் உலகப் போருக்கும் ராகு – கேதுவின் சஞ்சார நிலைகளே காரணமாகும் என, மேலை நாடுகளின் ஜோதிடப் பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் சரித்திரப் பிரசித்திப் பெற்ற, மாவீரரான நெப்போலியன் (செயின்ட் ஹெலீனா) என்ற தீவில் சிறை வைக்கப்பட்டு, அங்கு மரணமடைந்ததற்கும், நிழல் கிரகங்களே காரணம் என அந்நாட்டின் மிகப் பழைமையான சரித்திர நூல்கள் குறிப்பிட்டுள்ளன.

புராணங்களில், ராகு – கேது!

கிருத யுகம், ஆரம்பிக்கும் கால கட்டத்தில், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஏராளமான போர்கள் நிகழ்ந்துவந்தன. அப்போது இரு பக்கங்களிலும், உயிர்ச் சேதம் கடுமையாக ஏற்பட்டுவந்தது. ஆதலால், மரணங்களைத் தவிர்த்து, “சிரஞ்சீவியாக” வாழ்வதற்கு, அமுதம் வேண்டி, தேவர்களும் – அசுரர்களும் மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி எனும் தேவர்கள் நாகப் பாம்பினை கயிறாக்கி, கடைந்தபோது, அமுதம் வெளிப்பட்டது. தேவர்களும், அசுரர்களும் அமுதக் கலத்தை கவர்ந்து செல்ல முற்பட்டபோது, பகவான் ÿமந் நாராயணன், காண்போரை மயக்கும் அழகிய, மோகினி ரூபம் தரித்து, அவர்களைச் சமாதானம் செய்வித்து, அமுதத்தைத் தானே பகிர்ந்தளிப்பதாகக் கூறி, வரிசையாக இருசாராரையும் அமரச் செய்தார். அப்போது தேவர்களின் வரிசையில், அசுரன் ஒருவன் தேவர்களைப் போல் உருவெடுத்து, அமர்ந்துகொண்டான். இதனையறிந்த சூரியனும் – சந்்திரனும், குறிப்பால் மோகினி ரூபந்தரித்த பகவானுக்கு உணர்த்தினர்! அதற்குள், கரண்டியிலிருந்த அமுதத்தை அந்த அசுரன் விழுங்கிவிட்டான்!!

இதனையறிந்த மோகினி, தன் கையிலிருந்த கரண்டியினாலேயே அந்த அசுரனின் தலையைத் துண்டித்துவிட்டார்! இதனால், அந்த அசுரனின் உடல் இரண்டாகிவிட்டது. தலைப் பகுதி “ராகு” எனவும், கழுத்திற்குக் கீழேயுள்ள பகுதி “கேது” எனவும் அழைக்கப்படலாயினர்!

அமுதத்தைப் பருகிய காரணத்தினால், ராகுவிற்கும், கேதுவிற்கும் கிரகப் பதவிகள் கிடைத்து, நவக்கிரகங்களில் இருவராகப் போற்றப்படுகின்றனர்!

ஜனன கால ஜாதகத்தில், ராகு சுப பலம் பெற்றிருப்பின், அளவற்ற நன்மைகளைத் தந்தருள்வார்!

ஆயினும், “ராகு” என்றாலே, “கெடுபலனைத் தான் கொடுப்பார்!” என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஆழ்ந்து பதிந்துவிட்டது! அதேபோன்று, “கேது” மானிடப் பிறவியில், விரக்தியை ஏற்படுத்தி, மோட்சத்திற்கு வழிவகுப்பார் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுவிட்டது!!

இருப்பினும், ஜோதிடக் கலையில், “கொடுப்பதிலும், கெடுப்பதிலும் ராகுவிற்கு நிகர் அவரே….!” என விவரித்துள்ளது. இது உண்மையே!!

இதுபோன்றே, ஜனன கால ஜாதகத்தில், கேது சுப பலம் பெற்றிருப்பின், உலகப் பற்று குறைந்தும், ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரித்தும் வாழ்வார்கள் என்பதையும் ஜோதிடக் கலை விவரித்துள்ளது.

சென்ற சரித்திரக் காலத்தில், பாரதப் புண்ணிய பூமியின், புகழ்வாய்ந்த “நாளந்தாப் பல்கலைக்கழக”த்திலும், “தட்ச சீலம்” பல்கலைக் கழகத்திலும் ஏராளமான சீன, பாரசீக, எகிப்து, ரோமானிய மாணவர்களும் ஜோதிடக் கலையைப் பயின்று வந்ததை “ஹூவான் சுவாங்” என்ற சீன யாத்திரிகர், தனது குறிப்புகளில் விவரித்துள்ளார்.

பல இஸ்லாமிய அறிஞர்களும், யாத்திரிகர்களும், தங்கள் யாத்திரை அனுபவ நூல்களில், இவ்விரு கலாசாலைகளைப் பற்றியும், அவற்றில், வானிய கலை போதிக்கப்பட்டு வந்ததையும் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனன கால ஜாதகத்தில்,
ராகுவும் – கேதுவும்…!

ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில், ராசியிலிருந்து, 3, 6, 9, 11 ஆகிய இடங்களில் சஞ்கரிக்கும்போது, ராகுவும், கேதுவும் அளவற்ற நன்மைகளைத் தந்தருள்வார்கள் எனப் புராதன ஜோதிடக் கிரந்தங்களான, வராகமிகரரின் “பிருஹத் ஸம்ஹிதை”, பராசர மகரிஷி இயற்றியதாக நம்பப்படும் “பூர்வ பாராசர்யம்”, காளிதாஸன் இயற்றிய, “உத்தர காலாம்ருதம்” ஆகிய ஜோதிட நூல்கள் விவரித்துள்ளன.

மிகப் புகழ்பெற்ற “உத்தரப் பாராசர்யம்” எனும் ஜோதிடப் பொக்கிஷம், பகைவர்களால் நாளந்தாப் பல்கலைக் கழகம் தீயிலிடப்பட்டபோது, எரிந்து சாம்பலாயின!

புகழ்வாய்ந்த, மகான்கள், அவதாரப் புருஷர்களாகிய சித்தர் பெருமக்கள் ஆகியோரின் ஜனன காலங்களில், கேது, மிக உயர்ந்த, சுப பலம் பெற்றிருப்பதும், கேதுவின் பெருமையைப் பறைசாற்றுகிறது!

பொதுவாகவே, லக்னத்திலிருந்து, பன்னிரெண்டாம் இடத்தில் கேது அமர்ந்திருப்பின், அத்தகைய புண்ணியசாலிகளுக்கு, “மறு பிறவி” கிடையாது என்ற நம்பிக்கையும் பல காலங்களாக இருந்துவருவதை அனைவரும் அறிவர்! கேதுவிற்கே, “மோட்ச காரகர்” என்ற பெருமையுண்டு!!

தமிழகத்தின் புகழ்வாய்ந்த, அவதாரப் புருஷர்கள், சித்தமகா புருஷர்கள் ஆகியோரின் ஜனன கால ஜாதகங்களில் கேது, மற்றும் குரு, புதன் ஆகியோர் எவ்விதத் தோஷமுமின்றி, சுப பலம் பெற்றிருப்பதைக் காணலாம்.

மக்கள் இன்றும், பக்தியுடன் பூஜித்துவரும், திருவண்ணாமலை ÿரமண மகரிஷி, விசிறி சாமியார் என எளிய மக்களும் பூஜிக்கும் யோகி ராம் சுரத் குமார் ேபான்ற அவதாரப் புருஷர்களின் ஜாதகங்களிலும், பரம சுபக் கிரகமான குரு, ஆத்ம காரகரான சூரியன், மோட்ச காரகரான, கேது ஆகியோர் சுப பலம் பெற்றிருப்பதை ஜோதிடக் கலை எடுத்துக்காட்டுகிறது.

மக்களின் அன்றாட வாழ்க்கையில் என்ன நடைபெறவுள்ளதை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காக மட்டுமே, நமக்குக் கிடைத்துள்ள கலையல்ல, ஜோதிடம்! எத்தகைய தருணங்களில், நாம், நம் வாழ்க்கையில் எந்தெந்த அம்சங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்பதை, எடுத்துக்காட்டி, பாதுகாப்பினை அளிக்கிறது, ஜோதிடம் எனும் வாழ்க்கைக் கலை!

தவறான கருத்துகள்!

ராகுவைப்பற்றி காலங்காலமாக , மக்களிடையே பல தவறான கருத்துகள் நிலவி வருகின்றன!

ராகு, ஓர் அசுரக் கிரகம்! அவரது தசா காலத்தில், மிகக் கொடிய துன்பங்களை அளிப்பார் என்ற தவறான கருத்து, மக்களிடையே காலங்காலமாக இருந்துவருகின்றது. அவரவர்களது, சென்ற பிறவிகளின் பாப – புண்ணியங்களுக்கு (நற்செயல்கள் – தவறான செயல்கள்) ஆகியவற்றிற்கு ஏற்பவே, ராகுவும், கேதுவும் இன்ப, துன்பங்களை அளிக்கின்றனர் என்பதை ஜோதிடக் கலையும், தர்ம சாஸ்திரமும் விளக்கியுள்ளன.

ஜனன கால ஜாதகத்தில், ராகு மற்றும் கேதுவினால் ஏற்படும் மிகக் கடுமையான தோஷத்திற்கும், ஜோதிடக் கலையில் மிகச் சிறந்த – சுலபமான பரிகாரங்கள் உள்ளன. கடைபிடிப்பதற்கு எளிமையானவையுங்கூட!

திருமணப் பொருத்தத்தில்…!

பெண் அல்லது பிள்ளைக்கு வரன் பார்க்கும்போது, அவர்களின் ஜாதகங்களில், ராகு மற்றும் கேதுவின் சஞ்சார நிலைகளைக் கவனமாக, ஆராய்ந்து பார்த்த பிறகே வரனை நிச்சயிக்க வேண்டும் எனக் கூறுகின்றன, காளிதாஸரின், “உத்தர காலாம்ருதம்” எனும் நூலும், வராக மிகரரின் “பிருஹத் ஸம்ஹிதை”, “பஞ்ச சித்தாந்தம்”, “பிருகத் ஜாதகம்”, எனும் மிகப் பழைமையான கிரந்தங்கள். மண மக்களின் பரஸ்பர அந்நியோன்யம், வாழ்க்கைப் பிரச்னைகளில், பொறுமை, உடலுறவு ஆகியவற்றில் ராகுவின் நிலை சம்பந்தப்பட்டுள்ளது.

அவரவரது ஜனன கால ஜாதகத்தில், லக்னத்திலிருந்து, ஐந்தாம் இடம், பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானமாகும்! 7-ம் இடம் சயன – காம ஸ்தானமாகும். 7-ம் இடமும், 5-ம் இடமும் நெருங்கிய தொடர்புள்ளவைகளாகும். 7-ம் இடம் தோஷமில்லாமல் இருந்தால்தான், ஆரோக்கியமும், ஒழுக்கமும், தீர்க்காயுளும் கொண்ட குழந்தைகள் பிறக்கும்!!

மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளிக்கும் ஐந்து மற்றும் 7-ம் இடப் பொருத்தங்கள் மனிதத் திருமண வாழ்க்கைக்கு இன்றியமையாதவைகளாகும். இந்த ஐந்து இடங்களுக்கும், ராகுவின் பார்வை அல்லது சேர்க்கை உள்ளதா? என்பதைக் கணித்துப் பார்ப்பது, மிகவும் அவசியமாகும். இல்லாவிடில், திருமண வாழ்க்்கை கசக்கும்!!

திருமணத்திற்குப் பொருத்தம் பார்க்கும்போது, இருவரின் வாழ்க்கையையே ஜோதிடர்கள் நிர்ணயிக்கிறார்கள்! ஆதலால், ஜோதிடர்களின் பொறுப்பு, மகத்தானது!!

மருத்துவ ஜோதிடம்!

“ஜோதிஷம்” எனும் வானியல், வாழ்க்கைக் கலையில், “மருத்துவ ஜோதிடம்” (Medical Astrology) எனும் தன்னிகரற்ற ஓர் பிரிவே உள்ளது! எந்தக் கிரகத்தின் சஞ்சார நிலை தோஷத்தினால், எத்தகைய நோய் ஏற்படுகிறது? அதற்கு என்ன பரிகாரம்? எந்த மூலிகை மருந்து அதனைக் குணப்படுத்தும்…? என்ற விவரங்களை அந்தப் பிரிவு நமக்கு உள்ளங்கை, நெல்லிக்கனிபோல் எடுத்துக் காட்டுகிறது. சமீபத்தில், இப்பிரிவு விசேஷ மருத்துவ நூலாகத் திருவாங்கூர் அரச குடும்பத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.

மானிட வாழ்க்கையில், ராகு மற்றும் கேதுவின் பங்கு எந்த அளவிற்கு உள்ளது? என்பதை வேத கால மகரிஷிகளின் ஜோதிட நூல்கள் அதியற்புதமாக விளக்குகின்றன. பள்ளிகளில் அவற்றைப் பாடமாக வைத்தால், ஏராளமான குடும்பங்களும், குழந்தைகளும் நன்மை பெறுவர்.

கணித முறைகளில், சிறு வேறுபாடுகள்!

குரு பகவான், சனி பகவான், ராகு – கேது ஆகிய கிரகங்களின் ராசி மாறுதல்களைக் கணிக்கும் முறைகளில், சில வேறுபாடுகள், அவ்வப்போது ஏற்பட்டுள்ளன. இவற்றிற்குக் காரணம், சில பிரதான கிரகங்களின் சஞ்சார நிலைகளில் ஏற்படும் அதிசார, வக்கிர நிலைகளேயாகும். காலக்கிரமத்தில், இத்தகைய வேறுபாடுகள் “வாக்கியம்” மற்றும் “திருக்கணிதம்” என்ற கணித முறைகளாக மாறிவிட்டன! ஆயினும், பலன்களைப் பொருத்தவரையில், எவ்வித வேறுபாடும் ஏற்படவில்லை!!

ஜோதிடக் கணிப்பிற்கு, ஆதார நூல்களாக இன்றளவும் கருதப்படும் ÿவராகமிகிரரின், “பிருஹத் ஸம்ஹிதை” மற்றும் “பிருஹத் ஜாதகம்” ஆகியவை வாக்கியக் கணித முறைப்படியே பலன்கள் கூறப்பட்டுள்ளன. இவ்விரு நூல்களும், விக்கிரமாதித்திய மன்னரின் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்டவையாகக் கருதப்படுகின்றன. இதிலிருந்து, திருக்கணித முறை பிற்காலத்தில்தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது புலனாகிறது. மிகப் புராதன திருக்கோயிலான திருநள்ளாறில் வாக்கிய முறையே பின்பற்றப்பட்டுவருகிறது. மேலும், ராகு – கேது பரிகார திருத்தலங்களாகிய திருநாகேசுவரத்திலும், காளஹஸ்தியிலும் வாக்கியக் கணித முறையே கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. அவரவர்களது நம்பிக்கைப்படியே இக்கணித முறைகளைப் பின்பற்றலாம். இரு கணித முறைகளிலும், சம்பந்தப்பட்ட கிரகங்களின் ராசி மாறுதல் தேதிகளில்தான் வித்தியாசமே தவிர, பலன்களில் யாதொரு மாறுதலும் இல்லை! ஒவ்வொரு ராசியிலும், ராகுவும் – கேதுவும் அப்பிரதட்சணமாக (இடமிருந்து வலமாக) சுமார் 18 மாதங்களுக்கு ஒருமுறை சஞ்சரிக்கின்றனர்.

இவ்வருடம், கீழ்க்கண்ட தேதிகளில் ராகு – கேது ராசி பெயர்ச்சி நிகழ்கிறது:-

வாக்கிய கணித முறைப்படி:
சித்திரை 13, (26-4-2025)
திருக்கணித முறைப்படி :
வைகாசி 4, (18-5-2025)

ஜனன கால ஜாதகத்தைக் கணிக்கும்போது, அந்த ஜாதகம் வாக்கிய முறைப்படி கணிக்கப்பட்டுள்ளதா? அல்லது திருக்கணித முறைப்படிக் கணிக்கப்பட்டுள்ளதா? -என்பதை அவசியம் அந்தந்த ஜாதகங்களில் குறிப்பிடப்பட வேண்டும். அப்போதுதான், பலன்கள் மிகச் சரியாக இருக்க முடியும்.

இனி, அந்தந்த ராசியினருக்கு, தற்போது நிகழும் ராகு – கேது சஞ்சார நிலை மாற்றம் எத்தகைய பலா-பலன்களை அளிக்கவுள்ளது? என்பதைத் துல்லியமாகக் கணித்து “தினகரன்” வாசக அன்பர்களாகிய உங்களுக்குச் சமர்ப்பிப்பதில் பெருமிதமும், மனநிறைவையும் அடைகின்றோம். இதனால், எமது அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய “தினகரன்” வாசக அன்பர்கள், அனைத்து நன்மைகளை அடைந்து, வாழ்வில் மகிழ்ச்சியும், மன நிறைவையும் பெற நவக்கிரகங்களையும், எமது ஆராதனைத் தெய்வமாகிய ÿலட்சுமி நரசிம்மரையும் வணங்கி, பிரார்த்திக்கின்றோம். வாழ்க வளமுடனும், உடல் நலமுடனும்…!

The post கும்ப ராசியில் ராகு கொடுப்பாரா? appeared first on Dinakaran.

Read Entire Article