படகு கவிழ்ந்து கடலில் 3 மணி நேரம் தத்தளித்த மீனவர்கள் 11 பேர் மீட்பு

1 hour ago 2

நாகை: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியை சேர்ந்தவர் ரஸ்ரேன். இவர் தனக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று மாலை நாகை துறைமுகத்தில் இருந்து பாம்பனை சேர்ந்த மனோஜ்(37), வின்சன்ட்(23), பிரேம்குமார்(39), யுவான்சிஸ்(25), ஆகாஷ்(28), குட்டி(25), ரிவர்ட்டி (25), சக்தி(23), சந்தியா(36), சேசுராஜா(45), மேஜோ(28) ஆகிய மீனவர்களுடன் மீன் பிடிக்க சென்றார். நாகை துறைமுக முகத்துவாரம் அருகே நடுக்கடலில் விசைப்படகு சென்றபோது படகு இன்ஜின் பழுதடைந்தது. இதையடுத்து அலையின் வேகத்தில் படகு கவிழ்ந்ததால் 11 மீனவர்களும் கடலில் தத்தளித்தனர்.

இந்த தகவல் அறிந்ததும் மீனவர்களை மீட்பதற்காக கடற்படை போலீசார் படகில் சென்றனர். அப்போது கடற்படை போலீசாரின் படகும் பழுதடைந்தது. இதையடுத்து கடற்படை போலீசார் தொலை தொடர்பு கருவி மூலம் இந்திய சுங்கத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று கடற்படை படகை மீட்டு காரைக்கால் தனியார் துறைமுகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் உதவியுடன் கடற்படை போலீசார், 3 மணி நேரமாக கடலில் தத்தளித்து கொண்டிருந்த 11 மீனவர்களையும் மீட்டு நாகை கீச்சாங்குப்பம் துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் படகு கவிழ்ந்ததில் லேசான காயமடைந்த மனோஜ், வின்சன்ட், பிரேம்குமார், யுவான்சிஸ் ஆகியோரை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று பாம்பனுக்கு 11 மீனவர்களும் புறப்பட்டு சென்றனர். மீனவர்களின் விசைப்படகு, நாகை கீச்சாங்குப்பம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

The post படகு கவிழ்ந்து கடலில் 3 மணி நேரம் தத்தளித்த மீனவர்கள் 11 பேர் மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article